(ஆர்.யசி, எம்.ஆர்.எம்,வசீம்)
இலங்கையின் எரிபொருள் நிலையங்களை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுத்து விட்டு இப்போது உடன்படிக்கை முடிவுக்கு வந்து இரண்டாம் உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டியுள்ள நிலையில் உடன்படிக்கை செய்ய வேண்டாம் என போராடுகின்றனர் என அமைச்சர் காமினி லொகுகே சபையில் தெரிவித்ததுடன், அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய அபிவிருத்தி திட்டம் அவசியமானது எனவும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் இதுவரை பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய் மூல விடைக்களுக்கான விசேட நாளாக திங்கட்கிழமை சபை அமர்வுகள் கூடிய வேளையில், கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கையை மின்துறை அமைச்சர் ஏற்றுக் கொள்கின்றாரா எனவும், அறுபதாயிரம் கோடி ரூபா பெறுமதியான இந்த கேள்வி மனுக்கோரல் குறித்து நிதி அமைச்சரின் தீர்மானம் இறுதியானதா? அமெரிக்க அழுத்தம் காரணமாக, அமெரிக்க தூதரகத்தின் அழுத்தங்கள் காரணமாக இந்த திட்டம் அவர்களுக்கே ஒப்படைக்கப்படுமா? இதனால் தேசிய வேலைத்திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு பாதிப்பு வராதா என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி சபையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த மின் அமைச்சர் காமினி லொகுகே கூறுகையில், இயற்கை திரவ எரிவாயு திட்டத்திற்கு அமைய செயற்பட்டால் இப்போது 21 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ளும் மின்சாரத்தை 16 ரூபா வரையில் குறைத்துக் கொள்ள முடியும். இந்த இலாபம் நாட்டிற்கே கிடைக்கும். இது நல்லதா கேட்டதா? இதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்களா?
அதுமட்டுமல்ல நாம் அரசாங்கத்தை அமைத்த வேளையில் நாட்டின் அபிவிருத்திக்கு அரச மற்றும் தனியார் துறை இணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என வாக்குறுதி வழங்கியுள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில்தான் எண்ணெய் நிலையங்களை ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு கொண்டு இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் இந்திய ஐ.ஒ.சி நிறுவனத்தை பங்குதாரர் ஆக்கிக் கொண்டனர்.
எரிபொருள் நிலையங்களை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை செய்தவரே ரணில் விக்கிரமசிங்கவே. இப்போது உடன்படிக்கை முடிவுக்கு வந்து இரண்டாம் உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டியுள்ள நிலையில் வேண்டாம் என போராடுகின்றீர்கள், உடன்படிக்கையை செய்து வழிசமைத்தது கொடுத்துவிட்டு இப்போது போராடுகின்றீர்கள்.
கெரவலபிட்டிய நிலையம் மின்சார சபைக்கு சொந்தமான இடம் அல்ல, ஆனால் 2035 ஆம் ஆண்டில் அந்த இடம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமாகும். அதேபோல் 4,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய டீசல் உற்பத்தி நிலையமொன்றும் புதிதாக நிர்மாணிக்கப்படும். அதற்கும் அமெரிக்க முதலீடுகள் கிடைக்கும்.
ஆகவே நாட்டுக்கு அவசியமான வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். நாம் எப்போதும் அரசாங்கத்தின் பக்கம் நின்றே தீர்மானம் எடுக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment