(எம்.மனோசித்ரா)
நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு சுகாதார அமைச்சினால் 150 மில்லியன் கடன் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இந்தக் கடன் தொகையை மீளச் செலுத்தாமையின் காரணமாகவே அண்மையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒட்சிசன் விநியோக பிரச்சினை ஏற்பட்டது. எனவே சுகாதார அமைச்சு இந்தப் பிரச்சினைக்கு துரித தீர்வினைக்காண வேண்டும் என்று வலியுறுத்துவதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒட்சிசன் வழங்கும் நிறுவனங்களுக்கு சுகாதார அமைச்சினால் 150 மில்லியன் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே அண்மையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒட்சிசன் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது. இந்த விடயத்தில் சுகாதார அமைச்சின் மீதே தவறு காணப்படுகிறது. சுகாதார அமைச்சின் செயலாளர் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
கடந்த வாரம் இந்த பிரச்சினை மேலெழும்பியதால் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் இது குறித்து அறிந்து தற்காலிகமாக இந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்கியுள்ளனர்.
தற்போது ஒட்சிசன் விநியோகம் மாத்திரமே நிறுத்தப்பட்டது. ஆனால் இதே நிலைமை தொடருமாயின் முழு சுகாதார கட்டமைப்பும் முடங்கக்கூடும். கடனை செலுத்தா விட்டாலும் அதனை மீள செலுத்துவதற்கான வேலைத்திட்டங்களைக் கூட சுகாதார அமைச்சினால் முன்னெடுக்க முடியாமலுள்ளது.
சுகாதார அமைச்சின் தரவுகளுக்கமைய சுகாதார கட்டமைப்பில் மாத்திரம் 12 பில்லியன் கடன் சுமை காணப்படுகிறது. இதில் 9 பில்லியன் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எஞ்சிய 3 பில்லியன் தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவற்றில் சுமார் 2 பில்லியன் ஒரு வருடத்தை விட பழமையானதாகும்.
சுகாதார சேவை மக்களுக்கு அத்தியாவசியமானதாகும். சுகாதார சேவையை நடத்திச் செல்வதற்கு மக்கள் அனைவரும் வரி செலுத்தியுள்ளனர். எனவே மக்களுக்கு சுகாதார சேவையை தடையின்றி பெறறுக் கொள்வதற்கான உரிமை இருக்கிறது.
எனவே மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு ஒரு புறம் 12 பில்லியன் கடனை மீள செலுத்த நடவடிக்கை எடுப்பதோடு, மறுபுறம் செலவுகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment