தேவையற்ற வீண் செலவுகளை குறைத்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் : அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு சர்வ கட்சி ஊடாக தீர்வு காணவுள்ளோம் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

தேவையற்ற வீண் செலவுகளை குறைத்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் : அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு சர்வ கட்சி ஊடாக தீர்வு காணவுள்ளோம் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு வழங்க வேண்டும். தேவையற்ற வீண் செலவுகளை குறைத்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை காட்டிலும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பயன்தரக்கூடியது என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் முன்வைத்துள்ள தீர்வுகள் முரண்பாட்டை தோற்றுவிப்பதாக உள்ளது. இதனால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

விளை நெல்லுக்கு விலை பேச முடியாது. ஆகவே ஆசிரியர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். சமகால அரசியல் மற்றும் சமூக பிரச்சினைக்கு சர்வ கட்சி கூட்டத்தின் ஊடாக தீர்வு காணவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்

ஆசிரியர், அதிபர் தொழிற் சங்கத்தினருக்கும் சர்வ கட்சி தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் அபயராம விகாரையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், ஆசிரியர் அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாக அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியது. இந்த வாக்குறுதி ஏனைய வாக்குறுதிகளைப் போன்று பொய்யாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. இதன் காரணமாகவே போலியாக குழுக்களை அமைத்து காலத்தை கடத்துகிறது.

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு எதிராக அமைந்துள்ளன. தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு பலமுறை ஆலோசனை வழங்கியுள்ளோம். இருப்பினும் எவ்வித மாற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை. தற்போது தோற்றம் பெற்றுள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு சர்வ கட்சி ஊடாக தீர்வு காணவுள்ளோம் என்றார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர், விஜயதாஸ ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் உறுப்பினர் ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அத்துடன் ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment