திருகோணமலை எண்ணெய் குதங்கள் விடயத்தில் அரசாங்கம் தப்பித்துக் கொள்ள இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை சாட்டாக பயன்படுத்துவதை போலவே இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு அமைய 13 ஆம் திருத்த சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவீர்களா? என எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் கேள்வி எழுப்பினார்.
திருகோணமலை எண்ணெய்க்குதங்கள் விவகாரத்தில் ரணிலின் மௌனம் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, வாய் மூல விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில் அமைச்சர் உதய கம்மன்பில வலுசக்தி அமைச்சின் கேள்விகளுக்கு பதில் கூறிக் கொண்டு இருந்த வேளையில், ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல,
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு நாம் நிரந்தரமாக கொடுத்து விட்டதாக நேற்று சபையில் நீங்கள் கூறினீர்கள்.
நீங்கள் தப்பிப்பதற்காக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள். அப்படியென்றால் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைய 13 ஆம் திருத்த சட்டத்தையும் அதே போன்று நடைமுறைப்படுத்துவீர்களா? என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, கிரியெல்ல எம்.பியின் வயது காரணமாக அவருக்கு சரியாக நான் கூறியது விளங்கவில்லை போல். 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி அவர்கள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் தான் கைமாற்றப்பட்டது எனக் கூறி அந்த உடன்படிக்கையை சபைப்படுத்தியுள்ளேன் என்றார்.
லக்ஸ்மன் கிரியெல்ல, இவருக்கு எந்த நாளும் எனது வயது உறுத்துகின்றது, ஆனால் உங்களின் பிரதமரை விட நான் இளையவன் என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சமிந்த விஜயசிறி, இந்த விவகாரத்துடன் தொடர்புபட்ட நபரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று சபையில் இந்த விடயங்கள் விவாதிக்கப்பட்ட வேளையில் சபையில் இருந்தார். இந்த கேள்விகளுக்கு இல்லை என பதில் கூறியிருந்தால் அரசாங்கம் நெருக்கடியில் விழுந்திருக்கும், ஆம் என்ற பதிலை கூறியிருந்தால் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்திருக்கும். ஆகவே அவர் தெளிவான பதிலை கூறாத காரணத்தினால் இன்றும் முரண்பாடுகள் எழுந்துள்ளன, எனவே அவர் முதலில் பதில் தெரிவிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment