கொழும்பு மாநகர எல்லையில் பிரச்சினைகளுக்கு இடமளிக்காது சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வது விசேட அம்சமாகும் - மேயர் ரோசி சேனாநாயக்க - News View

Breaking

Monday, October 18, 2021

கொழும்பு மாநகர எல்லையில் பிரச்சினைகளுக்கு இடமளிக்காது சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வது விசேட அம்சமாகும் - மேயர் ரோசி சேனாநாயக்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் வேறு சில பிரதேசங்களில் அடிப்படைவாத சிந்தனைகளை பரப்பும் சிலரினால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கொழும்பு மாநகர எல்லையில் அவ்வாறான பிரச்சினைகளுக்கு இடமளிக்காது சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வது கொழும்பு நகரின் விசேட அம்சமாகும் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

மீலாதுன் நபி நிகழ்வை முன்னிட்டு கொழும்பு மாநகர சபை வளாகத்தில் மின் விளக்கு ஒளிரச் செய்யும் நிகழ்வு நேற்று மாலை மாநக ரசபை வளாகத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 150 வருடங்களுக்கு அதிக பழைமை வாய்ந்த கொழும்பு மாநகர சபையில் முதல் தடவையாக மீலாதுன் நபி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நிகழ்வை நடத்துவதற்கு மாநகர உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் மாநகர சபைக்கு கொண்டுவந்த பிரேரணைக்கு மாநகர சபை உறுப்பினர்கள் 119 பேரும் முழு மனதுடன் ஆதரவளித்தனர்.

இதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு மத்தியில் நபிகள் நாயகம் பற்றிய நன்மதிப்பை ஏற்படுத்துவதற்கும், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் எதிர்ப்பார்க்கின்றோம்.

நாட்டில் ஏனைய நகரங்களைவிட கொழும்பு மாநகரின் விசேட அம்சம் என்ன வெனில், சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என பல இனத்தவர்கள், மதத்தவர்கள் வாழ்கின்ற நகரமாகும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ஒருசில அடிப்படைவாத பிரச்சினைகள் இடம்பெறும் போதெல்லாம் மாநகர சபை எல்லையில் வாழும் மக்கள் அவ்வாறான பிரச்சினைகளுக்கு செல்லாது ஒருவரை ஒருவர் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவது இந்த நகரின் விசேடத்துவமாகும்.

அதேபோன்று கொழும்பு மாநகர சபையில் பல இனத்தவர்கள் உறுப்பினர்களாகவும் ஊழியர்களாகவும் இருக்கின்றபோதும் அனைவரும் ஒற்றுமையாக இன, மத வேறுபாடு இன்றி செயற்பட்டு வருவதை காண்கின்றோம். இவ்வறான நகர சபைக்கு மேயராக தெரிவு செய்யப்பட்டமையை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன் என்றார்.

No comments:

Post a Comment