பாடசாலைக்கு சமுகமளித்தால் இனி எந்தவொரு ஆட்சியாளர்களிடமிருந்தும் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது : கல்வி அறிவற்ற எம்பிக்களும், அமைச்சர்களுமே எமது போராட்டத்தை தவறாக விமர்சிக்கின்றனர் - உலப்பனே சுமங்கல தேரர் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 23, 2021

பாடசாலைக்கு சமுகமளித்தால் இனி எந்தவொரு ஆட்சியாளர்களிடமிருந்தும் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது : கல்வி அறிவற்ற எம்பிக்களும், அமைச்சர்களுமே எமது போராட்டத்தை தவறாக விமர்சிக்கின்றனர் - உலப்பனே சுமங்கல தேரர்

(எம்.மனோசித்ரா)

சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி நூறு நாட்களுக்கும் அதிகமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து திங்களன்று அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பார்களாயின், இனி எந்தவொரு ஆட்சியாளர்களிடமிருந்தும் இதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றிணைப்பின் ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கல்வி உரிமை பறிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளமையே குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு முன்னாள் கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக காணப்படும் நீண்ட வரிசைக்கான காரணம் ஆகும்.

எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் வரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப் போவதில்லை என்றும் உலப்பனே சுமங்கல மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களின் போராட்டம் பாரிய வெற்றியடைந்துள்ளது.

அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையின் காரணமாக போராட்டங்களை தோல்வியடைச் செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்த முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளது.

102 நாட்களுக்கும் அதிகமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர், ஆசிரியர்களை மீண்டும் வீதிக்கு இறக்குவதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது அரசாங்கத்தின் இதுபோன்ற செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் அதிபர், ஆசிரியர்களை உதாசீனப்படுத்துவதாகும்.

இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை காட்டிக் கொடுத்து திங்களன்று அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்தால் மீண்டுமொருமுறை எந்தவொரு ஆட்சியாளர்களிடமிருந்தும் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளவே முடியாது.

பாடசாலைக்கு சமுகமளிக்காத அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தல் அல்லது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் என்பன சட்ட ரீதியானதல்ல. அவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கத்திகு எவ்வித அதிகாரமும் கிடையாது. எனவே எவ்வித தடையும் இன்றி எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அவற்றுக்கு முன்னிலையில் நின்று தலைமை வகிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

தமது தோல்வியை மறைப்பதற்காக வியாழனன்று சகல பாடசாலைகளும் திறக்கப்பட்டிருந்ததாகவும் , ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளித்திருந்ததாகவும் கல்வி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் கூறுகின்றனர். ஆனால் எந்தவொரு பாடசாலையிலும் நுழைவாயில் கூட திறக்கப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை நிலைவரமாகும்.

கல்வி அறிவற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களுமே எமது போராட்டத்தை தவறாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். கற்ற அறிவுடைய அமைச்சர்களுக்கு எமது கோரிக்கைகள் நியாயமானவை என்பது தெரியும்.

எனவே 25 ஆம் திகதி திங்கட்கிழமையும் நாம் பாடசாலைக்கு சமுகமளிக்கப் போவதில்லை. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மாத்திரமே அன்றைய தினம் பாடசாலைகளுக்குச் செல்லும்.

இந்த போராட்டத்தின் ஒரு பாகமே குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு முன்னாள் கடவுச்சீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக காணப்படும் நீண்ட வரிசை ஆகும்.

உலகம் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது மாணவர்களின் கல்வி உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளதால் இலங்கை பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே இந்த வரிசைக்கும் காரணமாகும் என்றார்.

No comments:

Post a Comment