பாடசாலை திறக்க முன் தடுப்பூசி பெறாத ஆசிரியர்கள் தடுப்பூசி பெற வேண்டும் : பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

பாடசாலை திறக்க முன் தடுப்பூசி பெறாத ஆசிரியர்கள் தடுப்பூசி பெற வேண்டும் : பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் தரம் 01 தொடக்கம் 05 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகள் திறப்பதற்கு முன்னர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரின் உதவியோடு பாடசாலைகள் சுத்தம் செய்யப்பட வேண்டுமெனவும், டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்படுவதுடன், புகை விசுறுதல் செயற்பாடுகளை சுகாதார திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் கொவிட்-19 பரவல் மற்றும் டெங்கு நோய் சம்மந்தமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார். 

பாடசாலைகள் மீள திறக்கப்படும் போது காய்ச்சல், இருமல், தொண்டை நோவு போன்ற நோய் அறிகுறி தென்படுமாயின் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென பெற்றோர்களைக் கேட்டுள்ளார்.

மாணவர்களும், ஆசிரியர்களும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றை பேண வேண்டும். இதற்கு ஒவ்வொரு ஆசிரியரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

பாடசாலை உணவகங்கள் மூடப்படவேண்டும். மாணவர்களும், ஆசிரியர்களும் வீடுகளிலிருந்து தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் என்பவற்றை கொண்டு வருதல் வேண்டும். உணவு, நீர் என்பவற்றை பகிர்வதை தவிர்த்தல் வேண்டும்.

மாணவர்களின் பாடப்புத்தகங்களையும், அப்பியாசக் கொப்பிகளையும் ஆசிரியர்களோ, வேறு மாணவர்களோ தொடக்கூடாது.

வகுப்பறைகளில் மாணவர்களுக்கு திடீரென காய்ச்சல், இருமல் ஏற்பட்டால் பாடசாலையில் பிரத்தியேகமான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவரை வைத்தல் வேண்டும். இதற்கென ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டுமென கேட்டுள்ளார்.

அடிக்கடி கை கழுவுவதோடு, மலசல கூடங்களை துப்புரவாக வைத்திருப்பதோடு, போதியளவு நீர் மற்றும் சவர்க்காரம் என்பன வைக்கப்படல் வேண்டுமெனவும், அறிவித்துள்ளார்.

பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் எப்போதும் மாணவர்களின் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக நாளாந்தம் கண்காணிப்பில் ஈடுபடுவதோடு, பாடசாலையை பரிசோதனை செய்வதற்காக வரும் சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்தழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

ஒலுவில் விசேட நிருபர்

No comments:

Post a Comment