அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட அசறிக்கம கிராம மக்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8 1/2 ஏக்கர் அளவிலான காணியை பிரதேச செயலகம் ஊடாக பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த காணி கடந்த 20 வருட காலமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் அங்கு குர்ஆன் மனனப் பிரிவும் (ஹிப்ளு) நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் அக்காணியில் தொல்பொருள் அடையாளம் இருப்பதாக கூறி கடந்த இரண்டு வருட காலமாக கற்றல் நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் என்பன நிறுத்தப்பட்டு அதன் பொறுப்புக்களை கிராம அலுவலகரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அண்மைக் காலமாக குறித்த காணியை பிரதேச செயலகம் ஊடாக சேதனப் பசளை உற்பத்திக்கு என்ற போர்வையில் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தன.
இது குறித்து பிரதேச செயலாளர் மற்றும் அரசியல் ரீதியாகவும் சிலரை அணுகிய போதும் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் கடந்த 28 இரவு அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானை நேரடியாக சந்தித்து விடயத்தை அவரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
உடனடியாக செயற்பட்ட உறுப்பினர் இரவோடு இரவாக மாவட்ட செயலாளர், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டன.
இதன் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர், கிராம அலுவலகர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு நேரடி விஜயம் செய்து பிரதேச மக்களினதும் அரச அதிகாரிகளினதும் கருத்தறியப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் அதன் அபிவிருத்தி பணிகளை கிராம மக்கள் மேற்கொண்டு செல்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு தருவதாக தெரிவித்தனர்.
அதற்கான ஏற்பாடுகளை கிராமம் சார்ந்த சமூக நலன் விரும்பிகள், பள்ளி நிருவாகம் மற்றும் கிராம மக்களும் இணைந்து மேற்கொண்டு வருவதுடன். பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் நிருபர்
No comments:
Post a Comment