(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் முடியவடையும்போது மலையக பெருந்தோட்டத் துறைகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை பாதுகாக்க பெருந்தோட்டத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அரசாங்கம் கொண்டுவரும் சட்ட திட்டங்களை அரச நிறுவனங்களே பிற்பற்றுவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேருநர்களை பதிவு செய்தல் மற்றும் ஊழியர் சகாய நிதியம் (திருத்தச்) சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நிறுவனங்களில் சேவை செய்யும் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதொன்றாகும். ஆனால் அரசாங்கத்துக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலேயே இவை வழங்கப்படுவதில்லை.
குறிப்பாக பெருதோட்ட கம்பனிகளுக்கு சம்பந்தமான மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையில் பணி புரிந்த ஊழியர்களுக்கு ஈபிஎப், எடீப் வழங்கப்படாமை தாெடர்பில் அந்த கம்பனிக்கு எதிராக 1,200 வழக்குகள் இருக்கின்றன. அதேபோன்று எஸ்.எல்.எஸ்.பி.சி. கம்பனிக்கு எதிராக 700 வழக்குகள் எல்கடுவ பிலாண்டேஷனுக்கு எதிராக 200 வழக்குகள் பல வருடங்களாக இழுபட்டுக் கொண்டிருக்கின்றன.
நாங்கள் கொண்டுவரும் சட்ட திட்டங்களை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களே அந்த சட்டங்களை மீறுவதாக இருந்தால், இந்த சட்டங்களை கொண்டுவருவதில எந்த பயனும் இல்லை.
அதேபோன்று இன்று பெருந்தோட்டத் துறை பெரும் அபாய நிலையிலேயே இருக்கின்றது. பெருந்தோட்டத் துறையின் அடிப்படை நிறுவனமான மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை பெருந்தோட்ட அமைச்சுக்கு கீழ் இல்லை. விவசாய அமைச்சுக்கு கீழே இருக்கின்றது. பெருந்தோட்ட செய்கைகளான தேயிலை, றப்பர், தென்னை போன்ற செய்கைகளுக்கு பதிலாக விவசாய நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன இதுமிகவும் அபாயகரமான நிலையாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் அரிசிக்கு விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு போல் ஆகியுள்ளது. இந்த வர்த்தமானிக்கு எதிராக முதலாளிமார் தடை உத்தரவொன்றை கோரி இருந்தது. ஆனால் அது வழங்கப்படவில்லை.
அப்படியானால் அந்த சட்டம் இன்றும் அமுலில் இருக்கின்றது. அதன் பிரகாரம் 8 மணி நேரம் தொழில் செய்யும் சேவகருக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும். அதுதான் நாட்டின் சட்டம். ஆனால் நாட்டில் தொழில் அமைச்சர், தொழில் ஆணையாளர் இருக்கின்றார். ஆனால் இந்த சட்டத்தை அமுல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
அதனால்தான் பெருந்தோட்டங்களை பாதுகாத்துக் கொள்ளும் அதிகாரம் அரசாங்கத்தின் கையிலா, முதலாளிமார்களின் கைகளிலா, மக்களின் கைககளிலா இருக்கின்றது என அமைச்சர் வாசுதேவ நாயணக்கார சபையில் கேள்வி எழுப்பினார்.
அதேபோன்று முதலாளிமார்களின் நடவடிக்கைகளினால் விரக்தியடைந்திருக்கும் தொழிலாளர்கள் முதலாளிமார்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடக்குவதற்கு தோட்டத்துக்கு இராணுவத்தை காெண்டுவர வேண்டும் என முதலாளிமார் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இந்நிலை தொடருமானால் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் முடிவடையும்போது பெருந்தோட்டங்கள் இல்லாமல் போகும் அபாயம் இருக்கின்றது. அதற்கு பெருந்தோட்ட அமைச்சர் இடமளிக்க கூடாது என்றார்.
No comments:
Post a Comment