(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பண்டோரா பத்திரங்கள் விவகாரத்தில் நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் மீதான விசாரணைகளை ஜனாதிபதியின் கீழுள்ள ஆணைக்குழுக்களின் மூலமாக முன்னெடுப்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை. எனவே இந்த விசாரணைகளை ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸாருக்கு ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் சபையில் தெரிவித்தார்.
திருக்குமார் நடேசனின் சொத்துக்கள் பல இங்கிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும், ஐரோப்பியாவிலும் உள்ளன. ஆகவே இந்த சொத்துக்களை கண்டறிய ஸ்கொட்லன்ட்யார்ட் விசாரணைகளுக்கு செல்வதே சரியானதாக எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை,தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், பண்டோரா பத்திரங்கள் குறித்து இன்று உலகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது, இலங்கையிலும் நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயர்களும் வெளிவந்துள்ளன.
165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவர்களிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த நிதி சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட நிதியாகவே உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களே இந்த பண்டோரா பத்திரங்கள் மூலமாக வெளிவந்துகொண்டுள்ளன.
இது குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் இன்று எழுந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த கால எல்லைக்கும் தனக்கு தகவல்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கட்டளை ஒன்றினை பிறப்பித்துள்ளார்.
எமது ஆட்சியில் 19ஆம் திருத்தத்தின் மூலமாக இந்த நாட்டின் நீதிமன்றம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உள்ளிட்ட ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் சகலவற்றிலும் சுயாதீனமாக இயங்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தோம். அவ்வாறு இயங்கிய காரணத்தினால்தான் எமது அரசாங்கத்தில் உள்ள குற்றங்கள் குறித்தும் எமது அமைச்சர்களுக்கு எதிராக கூட வழக்குகள் தொடுக்க கூடியதாக இருந்தது.
ஆனால் 20’ஆம் திருத்தத்தை கொண்டுவந்து மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்துள்ளனர். சகல தீர்மானங்களும் நிறைவேற்று அதிகாரமே முன்னெடுக்கின்றது. அவ்வாறான நிலையில் அவரது சகோதரருக்கு எதிராக விசாரணை நடத்த கூறுவதில் எந்த நம்பிக்கையும் இல்லை.
அவரது நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் இயங்கும் இந்த ஆணைக்குழுவில் நிருபமா ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க கூறுகின்றார். அதுவும் திருக்குமார் நடேசனே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனராம்.
இந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஸ்கொட்லன்ட்யார்ட் விசாரணைகளுக்கு செல்ல வேண்டும். வெறுமனே ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணைகளில் எந்த நம்பிக்கையும் இல்லை. திருக்குமார் நடேசன் யார், எமது ஆட்சிக் காலத்தில் எமது அமைச்சர்களுடன் அவர் வைத்திருந்த தொடர்புகள், பஷில் ராஜபக்ஷவின் தேவைக்கேற்ப அவர் செயற்பட்டார் என்பதும் எமக்கு நன்றாக தெரியும்.
எனவே ராஜபக்ஷக்களுடன் தொடர்பில் உள்ள ஒருவர் குறித்து இங்கு விசாரணை நடத்துவது ஏமாற்று வேலையாகும். அதுமட்டுமல்ல திருக்குமார் நடேசனின் சொத்துக்கள் பல இங்கிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் உள்ளது. ஆகவே இந்த சொத்துக்களை கண்டறிய ஸ்கொட்லன்ட்யார்ட் விசாரணைகளுக்கு செல்வதே சரியானதாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment