தமிழ்க் கைதிகளை லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு - News View

Breaking

Thursday, October 21, 2021

தமிழ்க் கைதிகளை லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனையுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் 8 கைதிகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, காமினி அமரசேகர, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியிருந்தது.

அத்துடன், குறித்த மனுவில் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திலெடுத்த நீதிமன்றம், கைதிகளை அநுராதபுரம் சிறையில் இருந்து உடனடியாக வேறு பொருத்தமான சிறைக்கு மாற்றுமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.

குறித்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனு, கடந்த ஒக்டோபர் 05ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டபோது, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ள எட்டு கைதிகளுக்கும் போதிய பாதுகாப்பை வழங்குவதற்கான ஆலோசனையை வழங்குமாறு சட்ட மாஅதிபருக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மனு மீதான விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி ஆரப்பிப்பதற்கான உத்தரவையும் நீதிபதிகள் குழாம் இன்று விடுத்தது.

No comments:

Post a Comment