(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்தபோது தீ பரவலுக்கு உள்ளாகி மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் கப்பலை உடனடியாக கைப்பற்றுமாறு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்தது.
துறைமுகமா அதிபருக்கு இந்நடவடிக்கைகளை முன்னெடுக்க இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. வணிக மேல் நீதிமன்றின் நீதிபதி எம்.ஏ.ஆர். மரிக்கார் இதற்கான பிடியாணையைப் பிறப்பித்தார்.
ட்ரைகோ மெரிடைம்ஸ் எனும் நிறுவனம், கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, அது தொடர்பில் ஆராய்ந்தே, நீதிபதி இந்த பிடியாணையைப் பிறப்பித்தார்.
முறைப்பாட்டாளரான குறித்த நிறுவனம் சார்பில் வணிக மேல் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி டேன் மாலிக குணசேகர, தீ பரவலுக்கு உள்ளகி மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தனது சேவை பெறுநருக்கு சொந்தமான 6 கொள்கலன்கள் இருந்ததாக தெரிவித்தார். அவை மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்கள் தமது உறவினர்களுக்கு அனுப்பிய சுமார் 128000 கிலோ நிறை கொண்ட பொருட்கள் அக்கொள்கலன்களில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கப்பல் தீ பிடித்தமையால், அந்த அனைத்து கொள்கலன்களும் அழிவடைந்துள்ளதாகவும், அத்னூடாக தனது சேவை பெறுநருக்கு 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நட்டத்தை செலுத்த கப்பல் நிறுவனம் தவறியுள்ளது. தற்போதைய சூழலில், மூழ்கிய குறித்த கப்பலை, அவ்விடத்திலிருந்து கப்பல் காப்புறுதி நிறுவன துணையுடன் வேறு இடத்துக்கு எடுத்து செல்லப்பட்டு இரும்புக்காக வெட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
எனவே குறித்த நட்டத்தை ஈடு செய்வதற்காக குறித்த கப்பலை கைப்பற்ற பிடியாணை ஒன்றினை பிறப்பிக்க வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி டேன் மாலிக குணசேகர கோரினார்.
இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த கப்பலைக் கைப்பற்றுமாறு துறைமுகமா அதிபருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இந்த வழக்கானது மீள எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதுடன், அதன்போது இந்த முறைப்பாடு தொடர்பில் மன்றில் விடயங்களை முன் வைக்குமாறு குறித்த கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment