(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக இருந்தவாறு ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பில் அபயராம விகாரையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை அரசியல் சூழ்ச்சியாகும். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த தென்னகோன் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நல்லாட்சி அரசாங்கத்தில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனதான் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார். அக்காலகட்டத்தில் இவர் ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினை குறித்து கருத்துரைக்கவில்லை. முன்னேற்றகரமாக எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. தற்போது இப்பிரச்சினை தொடர்பில் அவர் கருத்துரைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக பொருத்தமான தீர்வு வழங்கப்படும்.
இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவது குறித்து அரசாங்கமும், நாட்டு மக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
ஆசிரியர், அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான பேச்சுவார்த்தை அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் 13 தொழிற்சங்கத்தினரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முக்கிய பல தரப்பினர் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment