இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் காலமானார் - News View

Breaking

Tuesday, October 5, 2021

இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் காலமானார்

இலங்கையின் தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் டாக்டர் சிரான் உபேந்திர தெரணியகல தனது 79 ஆவது வயதில் காலமானார்.

இலங்கையில் தொல்லியல் தொடர்பிலான பல்வேறு பொறுப்புக்களையும் இவர் வகித்துள்ளார்.

சிரான் தெரணியகல 1942 மார்ச் முதலாம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் பிறந்தார்.

இவரது தந்தையார் போல் ஈ.பி. தெரணியகலவும் ஒரு புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர். இவரது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் இவர் புனித தோமஸ் கல்லூரியில் பெற்றார்.

பின்னர் 1963, 1966 ஆம் ஆண்டுகளில் கேம்பிரிட்சில் கட்டிடக்கலை, சமசுக்கிருதம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டனில் இருந்த தொல்லியல் கல்வி நிறுவனத்தில் தொல்லியலில் பட்டமேற்படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்றார்.

இலங்கை திரும்பிய சிரான் தெரணியகல, 1968 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகப் பணியில் அமர்ந்தார்.

அக்காலத்தில் அறிவியல்சார் அகழ்வாய்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தார். 1988 இல் ஆவார்டில் முனைவர் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

இதற்காக இவர் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையும், தொடர்ந்த இது தொடர்பான வெளியீடும் இலங்கையில் மட்டுமன்றி ஏனைய தென்னாசிய நாடுகளின் வரலாற்றுக்கு முந்தியகால தொல்லியல் ஆய்வுகள் தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவர் 1992 முதல் 2001 வரை தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்துள்ளார்.

No comments:

Post a Comment