மக்களின் செயற்பாடுகளால் மீண்டும் தொற்று பரவினால் நாட்டை முடக்குவதை தவிர வேறு வழி எதுவுமில்லை : வைரஸானது வேறு திரிபுகளுடன் வீரியத்தை அதிகரித்துக் கொண்டு பரவும் சாத்தியம் - சுகாதார பணியகம் - News View

Breaking

Wednesday, October 20, 2021

மக்களின் செயற்பாடுகளால் மீண்டும் தொற்று பரவினால் நாட்டை முடக்குவதை தவிர வேறு வழி எதுவுமில்லை : வைரஸானது வேறு திரிபுகளுடன் வீரியத்தை அதிகரித்துக் கொண்டு பரவும் சாத்தியம் - சுகாதார பணியகம்

(ஆர்.யசி)

நாட்டில் கொவிட்19 வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்துள்ள போதிலும் நாடு இன்னமும் கொவிட் வைரஸ் பரவல் நிலைமையில் இருந்து விடுபடவில்லை. எனவே சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மக்களின் அனாவசிய செயற்பாடுகள் தொடருமானால், மக்களின் செயற்பாடுகள் காரணமாக மீண்டும் வைரஸ் தொற்று பரவினால் நாட்டை முடக்குவதை தவிர மாற்று தெரிவு வேறு எதுவுமே இருக்காது என சுகாதார பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

வைரஸானது வேறு திரிபுகளுடன் வீரியத்தை அதிகரித்துக் கொண்டு பரவும் சாத்தியம் இன்னமும் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டில் கொவிட்19 வைரஸ் பரவல் நிலைமைகளில் அச்சுறுத்தல் குறைந்து கொண்டு வருவதாக கருதப்படுகின்ற நிலையில், சுகாதார பணியகத்தின் அவதானிப்புகள், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து சுகாதார பணியகத்திடம் வினவிய போதே அவர்கள் இதனை கூறினர்.

சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன இது குறித்து கூறுகையில், கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து சுகாதார பணியகம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது. விசேட வைத்திய நிபுணர்கள், ஆய்வாளர்கள், சர்வதேச ஆய்வாளர்கள் மற்றும் சகல தரப்பினரதும் தரவுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் இலங்கையில் இன்னமும் வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில் வரவில்லை, வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது, மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதற்காக நாம் சவால்களில் இருந்து விடுபட்டுவிட்டோம் என எவரும் நினைக்க வேண்டாம்.

இலங்கைக்கு தொடர்ந்தும் கொவிட் வைரஸ் தாக்கத்திற்கான அச்சுறுத்தல் நிலைமை உள்ளது. அதுமட்டுமல்ல இலங்கையில் டெல்டா வைரஸ் பரவிக் கொண்டிருந்த நிலையிலேயே நாடு திறக்கப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான சூழ்நிலை அல்ல.

மாகாணங்களுக்கு இடையில் இன்னமும் பயணத்தடை நீக்கப்படவில்லை, ஆனால் விடுமுறை நாட்களில் மக்கள், மாகாணங்களை கடந்து பயணிப்பதை அதிகளவில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது மிக மோசமான செயற்பாடு, கொவிட் நிலைமைகளை கருத்தில் கொள்ளுமாறும், அச்சுறுத்தல் நிலைமை இன்னமும் மாறவில்லை எனவும் தொடர்ச்சியாக நாம் வலியுறுத்திக் கொண்டுள்ளோம்.

நாட்டின் நிலைமையையும் எம்மை சுற்றியுள்ளவர்களின் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இவ்வாறான அனாவசிய செயற்பாடுகளை நிறுத்துமாறு நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

மக்களின் செயற்பாடுகளில் பாரிய அதிருப்தியில் நாம் உள்ளோம். மீண்டும் நாட்டில் வைரஸ் பரவினால், மீண்டும் நாட்டை முடக்க நேரிடும். அதற்கு இடம் வழங்காத வகையில் மக்கள் செயற்பட வேண்டும் என்றார்.

சுகாதார பணியகத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இது குறித்து தெரிவிக்கையில், கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நிலைமையில் உள்ளது என்பதற்காக நாம் சகல சவால்களில் இருந்து விடுபட்டு விட்டோம் என அர்த்தம் கொள்ள முடியாது. ஆனால் மக்களின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கையில் நாடு கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையில் இல்லாததை போன்ற எண்ணப்பாட்டில் மக்கள் செயற்பட்டுக் கொண்டுள்ளனர்.

நாட்டை திறக்க பல்வேறு காரணிகள் முன்வைக்கப்பட்டன, குறிப்பாக நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம், பணிகள், மாணவர்களின் கல்வி போன்ற அத்தியாவசிய செயற்பாடுகளை கருத்தில் கொண்டே நாட்டை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர சுகாதார வழிமுறைகளை மீறிய மக்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அல்ல.

இப்போது வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை தவறாக பயன்படுத்திக் கொண்டு, மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மீண்டும் வைரஸ் பரவல் நாட்டில் ஏற்பட்டால், நாட்டை முடக்குவதை தவிர வேறு மாற்றுத் தெரிவுகள் இருக்கப் போவதில்லை. டெல்டா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

கொரோனா வைரஸ் வேறு திரிபுகளை ஏற்படுத்திக் கொண்டு வீரியத்தை அதிகரித்துக் கொண்டு வேகமாக பரவலாம். அவ்வாறான நிலைமை உருவானால் நாட்டை மூடுவது மட்டுமே தெரிவாக இருக்கும். எனவே இதனால் சகல மக்களும், நாடும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

இப்போது நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே நாடு திறக்கப்பட்டுள்ளதே தவிர மக்கள் குதுகலமாக விடுமுறைகளை வழமை போன்று கொண்டாடுவதற்கு அல்ல. இவ்வாறான மோசமான செயற்பாடுகள் காரணமாக மக்களே பாதிக்கப்படப் போகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment