பொருளாதார நிபுணர்கள் இருப்பார்களாயின் அரசாங்கத்திற்கு தாராளமாக ஆலோசனை வழங்கலாம் - அமைச்சர் ரோஹித - News View

Breaking

Wednesday, October 20, 2021

பொருளாதார நிபுணர்கள் இருப்பார்களாயின் அரசாங்கத்திற்கு தாராளமாக ஆலோசனை வழங்கலாம் - அமைச்சர் ரோஹித

(இராஜதுரை ஹஷான்)


விவசாயிகளின் போராட்டம் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. சேதன பசளை உற்பத்தியை பயன்படுத்தி சிறந்த விளைச்சலை பெற்றுள்ள விவசாயிகள் சேதன பசளை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலையதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் விலையினை அதிகரிக்காமல் இருக்கும் வழிமுறையை அறிந்துள்ள பொருளாதார நிபுணர்கள் இருப்பார்களாயின் அவர்கள் அரசாங்கத்திற்கு தாராளமாக ஆலோசனை வழங்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பால்மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்டன.

உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் விலையை அதிகரிக்காமல் இருக்கும் வழிமுறையை அறிந்த பொருளாதார நிபுணர்கள் இருப்பார்களாயின் அவர்கள் அரசாங்கத்திற்கு தாராளமாக ஆலோசனை வழங்கலாம். சமையல் எரிவாயு, பால் மா உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது.

விவசாயிகளின் பிரச்சினை தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டது. தொலைக்காட்சி நாடகத்தை போன்று விவசாயிகளின் போராட்டம் ஒவ்வொரு நாளும் மாற்றமடைகிறது. குறுகிய அரசியல் நோக்கத்திற்காக ஒரு தரப்பினர் விவசாயிகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சிறுபோக விவசாயத்தில் சேதன பசளையை பயன்படுத்தி சிறந்த விளைச்சலை பெற்ற விவசாயிகள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விவசாய நடவடிக்கையில் ஈடுபடாமல் சேதன பசளை பயன்தராது என்று குறிப்பிட்டுக் கொண்டு போராடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எக்காரணிகளுக்காகவும் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்படமாட்டாது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகள் முதற்கட்டமாக நாளை திறக்கப்படவுள்ளன. அர்ப்பணிப்புடன் ஆசிரியர் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment