தற்போதைய சுகாதார அமைச்சரையும் வலுவிழக்கச் செய்து அனைத்து அதிகாரங்களையும் குறித்தவொரு குழுவினர் தம்வசப்படுத்திக் கொள்ள முயற்சி : ரவி குமுதேஷ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 20, 2021

தற்போதைய சுகாதார அமைச்சரையும் வலுவிழக்கச் செய்து அனைத்து அதிகாரங்களையும் குறித்தவொரு குழுவினர் தம்வசப்படுத்திக் கொள்ள முயற்சி : ரவி குமுதேஷ்

(நா.தனுஜா)

சுகாதார அமைச்சருக்கும் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகப் பணிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் விளைவாக அவர்கள் அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனூடாக முன்னாள் சுகாதார அமைச்சரைப் போன்று தற்போதைய சுகாதார அமைச்சரையும் வலுவிழக்கச் செய்து, சுகாதார அமைச்சின் வீழ்ச்சிக்கான பொறுப்பை அவர் மீது சுமத்தி, அனைத்து அதிகாரங்களையும் குறித்தவொரு குழுவினர் தம்வசப்படுத்திக் கொள்ள முற்படுகின்றனர் என்று என்று மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் செவ்வாய்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, சுகாதார அமைச்சருக்கும் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகப் பணிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் விளைவாக அவர்கள் அப்பதவியிலிருந்து இராஜரினாமா செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு அமைச்சருடன் அமைச்சின் அதிகாரிகள் கருத்து முரண்பாடுகளில் ஈடுபடுவதென்பது சாதாரண விடயமல்ல. இது தற்போது சுகாதார அமைச்சிற்குள் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே பவித்ரா வன்னியாராச்சி சுகாதார அமைச்சராகப் பதவி வகித்தபோது அவர் வெறும் பொம்மையாகவே செயற்படுகின்றார் என்று நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். அமைச்சின் ஏனைய அதிகாரிகள் அமைச்சரை விடவும் வலுவான அதிகாரங்களை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணமாகும்.

இருப்பினும் 'நான் பொம்மையாகவே இருக்கின்றேன்' என்று பதிலளித்த முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இறுதியில் தோல்வியடைந்தார். அத்தகைய நிலைக்கு வழிகோலும் வகையிலான செயற்பாடாகவே மேற்கூறப்பட்ட கருத்து முரண்பாடுகளை நோக்க வேண்டியுள்ளது.

இராஜாங்க அமைச்சினதும் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தினதும் முக்கியஸ்தர்கள் பலரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

எனவே தற்போது சுகாதார அமைச்சருக்கு எதிராகக் கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதன் ஊடாக, வெகுவிரைவில் ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையீடு செய்து அமைச்சரை வாயடைக்கச் செய்வார் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

நாட்டுமக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளே அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். எனவே அவர்களுக்குரிய அதிகாரங்களை விடவும் மேலோங்கிய அதிகாரங்களை அமைச்சின் ஏனைய அதிகாரிகளுக்கு வழங்குவதென்பது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.

இருப்பினும் சுகாதார அமைச்சரை கருத்திலெடுக்காமல் சுகாதார அமைச்சின் ஏனைய அதிகாரிகள் இயங்குவதென்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எனவே மேற்கூறப்பட்டவாறு பதவியிலிருந்து விலக விரும்புபவர்கள் இராஜினாமா செய்ய முடியும்.

மாறாக முன்னாள் சுகாதார அமைச்சரைப் போன்று தற்போதைய சுகாதார அமைச்சரையும் வலுவிழக்கச் செய்து, சுகாதார அமைச்சின் வீழ்ச்சிக்கான பொறுப்பை அவர் மீது சுமத்தி, அனைத்து அதிகாரங்களையும் குறித்தவொரு குழுவினர் கைப்பற்றிக் கொள்ள முற்படுவதென்பது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

எனவே இது குறித்து ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்த வேண்டும். நாட்டில் முதற்தடவையாக சுகாதாரத் துறைக்கென இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்ட போதிலும் அதன் பணிகள் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை. இவை சுகாதார அமைச்சின் வருங்கால செயற்பாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment