சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா ? : ஆராயுமாறு உரிய தரப்புகளுக்கு கொவிட் ஒழிப்புச் செயலணி வலியுறுத்தல் - News View

Breaking

Friday, October 1, 2021

சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா ? : ஆராயுமாறு உரிய தரப்புகளுக்கு கொவிட் ஒழிப்புச் செயலணி வலியுறுத்தல்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் அந்தந்தத் துறையினர் ஆராய வேண்டும் என்று கொவிட் ஒழிப்புச் செயலணி வலியுறுத்தியது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதனால், மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தாதிருக்க, சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவது கட்டாயமென்று, சுகாதாரத் தரப்பு சுட்டிக்காட்டியது.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

இதன்போது, அரச மற்று தனியார் துறையினரைப் பணிக்கு அழைப்பது மற்றும் போக்கு வரத்து நடவடிக்கைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்களை, தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்துக்கமைய பின்பற்ற வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.

குறித்த சுற்றுநிரூபங்கள், அமைச்சுக்களின் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், பயணிகளின் தேவைக்கேற்ப, பஸ்கள் மற்றும் ரயில்களை, போதியளவில் சேவையில் ஈடுபடுத்த, போக்கு வரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மொத்த சனத் தொகையில், 30 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 95 சதவீதமானோருக்கு, இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டங்களும், தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தடுப்பூசி ஏற்றல் தொடர்பான விரிவான கணக்கெடுப்பொன்றை நடத்துவதற்கும், கொவிட் ஒழிப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.

சுற்றுலா மற்றும் பொருளாதாரத் துறைகளின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பிலும், இந்தக் கூட்டத்தின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தொற்றுப் பரவல் நிலைமையைக் கட்டுப்படுத்தி வாழ்க்கை முறையைத் தொடர்வதற்காக, சுகாதாரத்துறை நிபுணர்களின் ஆலோசனைகளை ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களிடம் தொடர்ந்து கொண்டு செல்லவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment