தென் சீனக் கடலில் மர்ம பொருள் மீது மோதிய அமெரிக்க அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 9, 2021

தென் சீனக் கடலில் மர்ம பொருள் மீது மோதிய அமெரிக்க அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்

அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென் சீனக் கடலில் நீரில் மூழ்கியிருந்தபோது மர்மப் பொருள் ஒன்றின் மீது மோதியதாகவும், அதில் பல மாலுமிகள் காயமடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று கூறும் அவர்கள், கப்பல் முழுவதும் செயல்படுவதாகவும் கூறுகின்றனர்.

தென் சீனக் கடலில் சர்வதேச கடற்பரப்பில் இந்த சம்பவம் நடந்ததாகவும், இதில் 11 மாலுமிகள் காயமடைந்ததாகவும் பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தப் பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தால் நீர்மூழ்கி கப்பலுக்கு எந்த அளவுக்கு சேதாரம் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், ஆனால், அணுசக்தி உந்துவிசை அலகுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.

கடற்படையின் அறிக்கையில் எங்கே இந்த சம்பவம் நடந்தது என்பது குறித்தோ, எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்தோ எதுவும் இல்லை. ஆனால், காயம் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக இல்லை என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய இரண்டு அதிகாரிகள் 11 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும், காயம் மிதமானது என்றும் குறிப்பிட்டதோடு, அவர்கள் நீர் மூழ்கிக் கப்பலிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

நீர்மூழ்கி தனது வழக்கமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும், பாதுகாப்பு கருதி வியாழக்கிழமை வரை இது குறித்து கடற்படை செய்தி எதையும் வெளியிடவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

யு.எஸ்.எஸ். கனெக்டிகட் நீர் மூழ்கி கப்பலுடன் மோதியது வேறொரு நீர் மூழ்கிக் கப்பல் அல்ல என்று அசோசியட்டட் பிரஸ் முகமையிடம் கூறிய அதிகாரிகள் அது மூழ்கிய கப்பலாகவோ, கண்டெய்னராகவோ இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இந்த மோதலால் இத்தனை பேருக்கு காயம் பட்டிருப்பதைப் பார்க்கும்போது அந்த கப்பலுடன் மோதியது ஏதேனும் ஒரு பெரிய பொருளாக, வேகமாக சென்றுகொண்டிருந்த பொருளாக இருந்திருக்க வேண்டும் என்று சிங்கப்பூரை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் அலெக்சான்டர் நெய்ல் பிபிசியிடம் கூறினார்.

இத்தகைய சம்பவங்கள் வழக்கமாக நடப்பவை அல்ல என்றபோதும் கேள்விப்பட்டிராத ஒன்று அல்ல என்று கூறிய அவர், படை நடவடிக்கைகளால் அந்தப் பகுதி எவ்வளவு பரபரப்பாக உள்ளது என்பதை இது காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

"தென் சீனக் கடலில் மேலும் மேலும் அதிக நாடுகளின் கப்பல்கள் செயல்பட்டு வருகின்றன. கடல் மேற்பரப்பில் பல நாடுகள் தங்கள் பலத்தை காட்டி வரும் நிலையில் கடலுக்கு அடியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து காத்திரமான கவலை கொண்டிருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களையும், பயணத்துக்கான காரணத்தையும் தரும்படியும் அமெரிக்காவைக் கேட்டுக் கொள்வதாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் அந்நாட்டின் அரசு ஊடகமான குளோபல் டைம்சில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க பிராந்தியமான குவாம் நோக்கி செல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதைப் போல அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் கடலடியில் வேறொரு பொருளோடு மோதிக் கொண்ட பெரிய சம்பவம் 2005 இல் நடந்ததாக, அமெரிக்க கடற்படை தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் சிறப்பு பெற்ற யு.எஸ்.என்.ஐ. நியூஸ் தளம் கூறியுள்ளது. 

அந்த சம்பவத்தில் யுஎஸ்எஸ் சான் பிரான்சிஸ்கோ என்ற நீர் மூழ்கிக் கப்பல் முழு வேகத்தில் சென்று குவாம் அருகே உள்ள ஒரு கடலடி மலை மீது மோதிக் கொண்டது என்றும் அதில் ஒரு மாலுமி உயிரிழந்ததாகவும் அந்த தளம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment