யாழ். சிறைக்கு மாற்றப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ? - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

யாழ். சிறைக்கு மாற்றப்படவுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ?

(எம்.எப்.எம்.பஸீர்)

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக விரைவில் யாழ். சிறைக்கு மாற்றப்படுவதற்கான பச்சை சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை முன் வைத்துள்ள, அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 அரசியல் கைதிகளின் பாதுகாப்பினையும் உறுதி செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் பின்னணியில் இந்த பச்சை சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் ஆகிய இருவரும் இது தொடர்பில் கைதிகளுக்காக மன்றில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனிடம் விடயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, நேற்று ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி கேசவன் சயந்தன் அனுராதபுரம் சிறைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து வழக்கு தொடர்பில் மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்போது சுமார் 3 மணி நேரம் கைதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அரசியல் கைதிகள் மேலதிக சத்தியக் கடதாசிகள் உள்ளவற்றை சட்டத்தரணிக்கு வழங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே, பாராளுமன்றத்தில் வைத்து அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உருதி செய்வதாக தெரிவித்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் பாதுகாப்பு வழிமுறையாக அவர்களை யாழ். சிறைக்கு மாற்றுவது தொடர்பில் சாதகமான கலந்துரையாடலை நடாத்தியுள்ளார். இதனைவிட அனுராதபுரம் சிறை அத்தியட்சரும் அதற்கான பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

முன்னதாக அனுராதபுரம் சிறையில் தடுத்து வைத்துள்ள 8 அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளின் போது, மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வாதங்களை செவிமடுத்த பின்னர் உயர் நீதிமன்றம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவை பிறப்பித்தது.

இதனைவிட, குறித்த அரசியல் கைதிகளை சந்திக்க அவர்களது சட்டத்தரணிகளுக்கு அனுமதியளிக்குமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் அனுராதபுரம் சிறை அத்தியட்சருக்கு ஆலோசனை வழங்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அறிவித்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியர்சர்களான முர்து பெர்ணான்டோ மற்றும் எஸ். துறைராஜா ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment