பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலயத்திற்குள்ளும் ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்குள்ளும் காலணியுடன் பிரவேசித்ததாகச் செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் இணையத் தளங்களிலும் பரவிய நிலையில் அதன் உண்மைத்தன்மை தொடர்பாக விடயமறிய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் பிரகாரம் பருத்தித்துறைப் பிரதேச செயலக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலமாக சம்பந்தப்பட்ட ஆலயங்களின் அறங்காவலர் சபைத் தலைவரிடம் நேரிற் சென்று அறிக்கை பெற்றுக் கையளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது
அதற்கமைய இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், பொலிஸ் உத்தியோகத்தர் வருகை தொடர்பாக முதல்நாளே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்ததென்றும் வந்தவர்கள் இந்து சமய கலாசார முறைப்படியே ஆலயத்திற்குள் உட்பிரவேசித்து, சுவாமிக்கு அர்ச்சனை செய்வித்து, குருக்கள் ஆசிர்வாதமும் பெற்று, ஆலயதரிசனம் முடித்து வெளியேறினார்கள் என்று ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய அறங்காவலர் சபையாற் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் அறங்காவலர் சபையினர், வழமை போன்று வந்து செல்லும் அடியார்கள் போன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து சென்றிருக்கலாம் என்றும் முகப் புத்தகங்களில் உள்ள விடயம் தொடர்பாகத் தங்கள் அறியவில்லை எனவும் பொலிஸ் உத்தியோகத்தர் காலணியுடன் பிரவேசித்ததாக தாம் எந்த ஒரு முறைப்பாடும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment