"நூறு நகரங்கள்" தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் மல்லவகெதர முற்சந்தி அபிவிருத்திப் பணிகள் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த மற்றும் நகர அபிவிருத்தி, கழிவுப் பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா ஆகியோரின் தலைமையின் கீழ் நேற்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கேற்ப நகர அபிவிருத்தி, கழிவுப் பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவின் வழிகாட்டுதலுடன் 'நூறு நகரங்கள்' அபிவிருத்தி வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நாடு பூராகவும் செயற்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களைச் சேர்த்து கிராமிய நகரங்களையும் சரியான முறையில் அபிவிருத்தி செய்வதற்கான பணிகளை இந்தத் திட்டத்தின் மூலமாக அமுல்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.
இதன் அடிப்படையில் மல்லவகெதர நகரத்தை பிரதான கேந்திர இடமாக வைத்து அதன் வீதிகள் மற்றும் நடைபாதைகளை நிர்மாணிப்பதோடு சிறுவர் பூங்கா மற்றும் மூலிகைத் தோட்டம், பஸ் தரிப்பு நிலையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூபா 20 மில்லியன் ஆகும்.
இந்நிகழ்வில் திவுலப்பிட்டிய பிரதேச சபைத் தலைவர் இந்திக ஜயசிங்க, நகர அபிவிருத்தி அதிகார சபை பிரதித் தலைவர் ரூபா ரஞ்சனி மற்றும் அதன் அதிகாரிகள், பிரதேச அரசியல்வாதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டர்.
முனீரா அபூபக்கர்
No comments:
Post a Comment