வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக கடவுச்சீட்டைப் பெற விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு, நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? - கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

Breaking

Thursday, October 21, 2021

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக கடவுச்சீட்டைப் பெற விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு, நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? - கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(நா.தனுஜா)

அண்மைக் காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டைப் பெறுவதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நூற்றுக்கு ஐம்பது சதவீதம் என்ற அளவில் சடுதியாக அதிகரித்திருக்கின்றது. பெருமளவான இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டுச் செல்வதற்கு விரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அடுத்த தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.


இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வைப்பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று புதன்கிழமை கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேசத்தில் அன்னாசி பயிர்ச் செய்கையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களினாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் விவசாயிகள் உள்ளடங்கலாக ஒட்டு மொத்த நாட்டு மக்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறிப்பாக விவசாயிகள் தமது பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை உரியவாறு முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான உரம் மற்றும் கிருமிநாசினிகள் என்பவற்றின் இறக்குமதியைத் தடை செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாகச் சீர்குலைக்கும் வகையிலான செயற்பாட்டை அரசாங்கம் இப்போது முன்னெடுத்துள்ளது.

உர இறக்குமதித் தடை காரணமாகப் பாதிப்பை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு நட்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அதிபர், ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதற்கு நிதியொதுக்கீடு செய்யமுடியாதளவிற்குப் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய அரசாங்கம், விவசாயிகளுக்கான நட்டஈட்டை எவ்வாறு வழங்கும்?

அதுமாத்திரமன்றி பெருமளவான இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டுச் செல்வதற்கு விரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதற்கமைய அண்மைக் காலத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக அதிகளவானோர் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டைப் பெறுவதற்காக விண்ணப்பிப் போரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதத்தினால் சடுதியாக அதிகரித்திருக்கின்றது. இவ்வாறு அடுத்த தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? இவையனைத்தும் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திறனற்ற நிர்வாகத்தின் விளைவுகளேயாகும்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் விவசாயிகளின் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான உரம், கிருமிநாசினி உள்ளிட்ட அனைத்தும் உரியவாறு பெற்றுக் கொடுக்கப்படும்.

அதுமாத்திரமன்றி பொருட்களின் சடுதியான விலையேற்றத்தினால் மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்து, வறுமைநிலை மேலோங்கியிருக்கின்றது. எமது அரசாங்கத்தின் கீழ் இவையனைத்தையும் மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து, நாட்டை மீளகட்டியெழுப்புவோம் என்று சூளுரைத்தார்.

அதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஒருவர் கருத்து வெளியிடுகையில், 'நாம் வங்கிகளில் கடன் பெற்று, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே விவசாயத்தில் ஈடுபடுகின்றோம். அதன் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்திலேயே எமது வாழ்க்கையை முன்கொண்டு செல்கின்றோம்.

இருப்பினும் அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளினால் நாம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். சேதனப் பசளையைப் பயன்படுத்தும் திட்டம் சிறந்ததாகும். ஆனால் சேதனப் பசளையை நினைத்த மாத்திரத்தில் தயாரித்து விட முடியாது. குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு தீர்மானங்களை மேற்கொள்பவர்களால் இதனைப் புரிந்து கொள்ளமுடியாது' என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment