ட்விட்டர், பேஸ்புக்குக்கு போட்டியாக தனி சமூக ஊடகம் தொடங்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - News View

Breaking

Thursday, October 21, 2021

ட்விட்டர், பேஸ்புக்குக்கு போட்டியாக தனி சமூக ஊடகம் தொடங்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (TRUTH Social) என்ற புதிய சமூக ஊடக வலைத்தளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக இந்த தளம் நிற்கும்" என்று கூறிய அவர், அமெரிக்காவில் எதிர்ப்புக் குரல்களை அந்த நிறுவனங்கள் அமைதிப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி போட்டிக்கு டிரம்ப் முன்னின்றபோது, அதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்காற்றின. அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், உலகை தொடர்பு கொள்ளும் சாதனமாக சமூக ஊடகங்களையே அவர் பயன்படுத்தினார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வாரங்களில் டிரம்ப் ட்விட்டர் நிறுவனத்தால் தடை செய்யப்பட்டார். அமெரிக்க செனட் இயங்கி வந்த கேப்பிடல் ஹில் கட்டடத்துக்குள் டிரம்பின் ஆதரவாளர்கள் புகுந்த பிறகு டிரம்பின் கணக்கை ஃபேஸ்புக் முடக்கியது.

டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது இடுகைகள் பலவும் அவமதிக்கும் வகையிலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் பொய்யுரைகளை ஆதரிக்கும் வகையில் இருந்ததால், அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஊடக நிறுவனங்களுக்கு பல தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவை, டிரம்பின் சில இடுகைகளை நீக்கின அல்லது அவரது பதிவின் கீழ் 'இது தவறாக வழிநடத்தப்படக் கூடிய இடுகை' என்ற வரியை இடம்பெறச் செய்தன. ஃப்ளூ காய்ச்சலை விட குறைவான ஆபத்தை கொரோனா கொண்டிருந்தது" போன்ற இடுகைகளை அவர் அந்த நாட்களில் பகிர்ந்து வந்தார்.

இதன் உச்சமாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஒரு மோசடி என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார் டிரம்ப். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் நடந்த கலவரத்துக்குப் பிறகு டிரம்புக்கு தடை விதிக்க அல்லது இடைநீக்கம் செய்ய இந்த சமூக வலைத்தள நிறுவனங்கள் முடிவெடுத்தன.

கலவரங்களுக்கு பதிலளித்த டிரம்ப், கலவரத்தில் ஈடுபடுவோரை கேப்பிடல் பற்றாளர்கள் என்று அழைத்தார். தேர்தல் முடிவை ஏற்கும் எந்த அறிகுறியையும் அவர் வெளிக்காட்டவில்லை. இந்த காரணத்துக்காக அவர் தொடர்ந்து தங்களுடைய தளங்களை பயன்படுத்த அனுமதிப்பது மிகவும் ஆபத்தாகலாம் என்ற முடிவுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை வந்ததாகக் கூறின.

இதையடுத்து இந்த சமூக ஊடகங்களுக்கு போட்டியாக ஒரு சமூக ஊடக தளத்தை உருவாக்கப் போவதாக அப்போதே அறிவித்திருந்தார் டொனால்ட் டிரம்ப்.

முன்னதாக இந்த ஆண்டு ஜுன் மாதம் 'டொனால்ட் டிரம்பின் மேசையில் இருந்து' என்ற பெயரில் ஒரு மக்கள் தொடர்பு வலைத்தளத்தை டிரம்ப் தொடங்கினார். டிரம்பை ஆதரிக்கும் பார்வையாளர்களை மட்டுமே அது ஈர்த்த வேளையில், தொடங்கிய ஒரு மாதத்திலேயே அந்த வலைத்தளம் நிரந்தரமாக மூடப்பட்டது.

இந்த வலைத்தளம் தொடங்கப்பட்டபோது, டிரம்பின் மூத்த உதவியாளர் ஜேசன் மில்லர், "இந்த வலைத்தளம் டிரம்பின் பரந்த முயற்சிகளுக்கு துணையாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், டிரம்ப் உருவாக்கியிருக்கும் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில், பார்வையாளர்கள் சேருவதற்கான அழைப்பு அடுத்த மாதம் விடுக்கப்படும் என்றும் 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கை அதில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

"ட்விட்டரில் தலிபான்கள் அதிக அளவில் இருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம், ஆனாலும் உங்களுக்கு பிடித்த ஜனாதிபதி அமைதிப்படுத்தப்பட்டுள்ளார்," என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

"பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக ஏன் யாரும் எழுச்சி பெறுவதில்லை என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். சரி, விரைவில் நாமே அதை செய்வோம்," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் புதிய சமூக ஊடகத்தள முயற்சி குறித்து வட பிபிசியின் அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் கூறும்போது, "இதை பெரிய முயற்சியாக டிரம்பின் குழு காட்டுகிறது. ஆனால், இந்த புதிய சமூக ஊடகத்தளம் எப்படி இயங்கும் என்பதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை. இப்போதைக்கு அது வெறும் பதிவுப்பக்கம் மட்டுமே," என்று கூறியுள்ளார்.

பேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக ஒரு சமூக ஊடகத்தளத்தை உருவாக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார். ஆனால், நடைமுறையில் அது எளிதாக நடக்கக்கூடிய விஷயமல்ல என்றும் ஜேம்ஸ் கிளேட்டன் தெரிவித்தார்.

ஆரம்பிக்கும் தொனியைப் பார்க்கும்போதே, அது அரசியல் மிகுதியான தளமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ட்விட்டரின் சிந்தனைகள் போலவோ / பேஸ்புக் போல மொத்த குடும்பமும் உறுப்பினராக இருக்கும் தளம் போலவோ அது இருக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது.

வேண்டுமானால், Parler அல்லது Gab போன்ற சமூக பேச்சு சுதந்திரம் மிகுந்த பிற சமூக ஊடகங்களை விட மிகையான வெற்றிகர தளமாக அது வரலாம்.

டொனால்ட் டிரம்ப்புக்கு திரும்பவும் தனது குரலை பிரதிபலிக்க ஒரு தளம் தேவை. இந்த தளம் அதற்கு பயன்படலாம். ஆனால், இந்த தளம் மூலம் நிச்சயம் அவரது கருத்துகள் கேட்கப்படும். ஆனால், அவரது குரல் உண்மையிலேயே கேட்கப்பட வேண்டுமானால், அதற்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவு டிரம்புக்குத் தேவை. அது இப்போதைக்கு நடக்காது என்றே தோன்றுகிறது என்கிறார் ஜேம்ஸ் கிளேட்டன்.

No comments:

Post a Comment