(நா.தனுஜா)
புகையிரதங்களை இயக்குவதற்கு அவசியமான டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை மறைப்பதற்காகவே அரசாங்கம் மாகாணங்களுக்கு இடையிலான போக்கு வரத்தையும் புகையிரத சேவையையும் இடைநிறுத்தியிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாடு முழுமையாகத் திறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்கு வரத்து மாத்திரம் இம்மாதம் 31 ஆம் திகதி வரையிலும் புகையிரத சேவை மறு அறிவித்தல் வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் புகையிரதங்களை இயக்குவதற்கு அவசியமான டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை மறைப்பதற்காகவே அரசாங்கம் மாகாணங்களுக்கு இடையிலான போக்கு வரத்தையும் புகையிரத சேவையையும் இடைநிறுத்தியிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி அமெரிக்க நிறுவனமொன்றிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி கோரி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப்பத்திரம், மிகப்பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment