எனது அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்பதிகள் காணப்பட்டால் என்னிடத்தில் தெளிவுபடுத்தல்களை பெற்றிருக்க வேண்டும். ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்ற முறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். எதுவுமின்றி தான்தோன்றித்தனமாக அடிப்படை உறுப்பினரான என்னை கட்சியிலிருந்து விலக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் மூலம் நியமனம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தி முறையற்ற வகையில் எனது விடயத்தில் நடவடிக்கைகளை எடுத்தால் நீதிமன்றத்தினை நாடுவதற்கும் தயராக உள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
20ஆவது திருத்தச் சட்டத்தின் ஆதரவாக வாக்களித்தமை உட்பட கட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் டயனா கமகேயை கட்சியிலிருந்து நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடத்தில் கோரியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேமதாஸவுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து நானும், எனது கணவரும் ஆரம்பித்த கட்சியினை பெயர் மாற்றி அவருக்கு பயன்படுத்துவதற்கு வழங்கினோம்.
அத்துடன் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்ததோடு அப்பதவிகளுக்கு சஜித் பிரேமதாஸவையும் அவருடைய உறுப்பினர்களும் அப்பதவியை பெற்றுக் கொடுப்பதற்கு உதவினோம்.
ஆதன் பின்னர் நான் உப செயலாளராகவும்,கணவர் பிரதி தலைவராகவும் நீடித்த போதும், சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள் கட்சியின் யாப்பினை மாற்றி எனது கணவரை பதவியிலிருந்து விலகுமாறு கோரினார்கள்.
கட்சியை அவர்களுக்கு வழங்கியதன் பின்னர் தொடர்ந்தும் அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருக்காது அவர்களது கோரிக்கையையும் நிறைவேற்றினோம்.
அவ்வாறிருக்கையில் நான் தற்போது வரையில் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கின்றேன். எனது மனச்சாட்சியின் பிரகாரமே நான் நடந்து கொண்டேன். 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு நான் ஆதரவளித்திருந்தமை குறித்து கட்சி என்னிடத்தில் எவ்விதமான விளக்கத்தினையும் கோரவில்லை. எனது செயற்பாடுகள் கட்சிக்கு முரணாக இருக்கின்றது என்றால் அதுபற்றி என்னிடத்தில் தெளிவுபடுத்தல்களை கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் இதுவரையில் அவ்விதமான எச்செயற்பாடுகளையும் மேற்கொள்ளாது ஊடகங்களில் என்னை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிப்பது பொருத்தமற்றது. என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கான கடிதத்தினை கூட எனக்கு இன்னமும் அனுப்பவில்லை. இவ்வாறு தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்து என்னை கட்சியிலிருந்து நீக்க முடியாது.
கேசரி
No comments:
Post a Comment