உலகின் பிரபல விமான சேவை நிறுவனங்கள் மத்தல விமான நிலையம் ஊடாக சேவை : கலந்துரையாடல்கள் ஆரம்பம் என்கிறார் அமைச்சர் டி.வீ. சானக - News View

Breaking

Monday, October 4, 2021

உலகின் பிரபல விமான சேவை நிறுவனங்கள் மத்தல விமான நிலையம் ஊடாக சேவை : கலந்துரையாடல்கள் ஆரம்பம் என்கிறார் அமைச்சர் டி.வீ. சானக

உலகின் பல முன்னணி விமான சேவைகள் மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தினூடாக சேவைகளை ஆரம்பிப்பதற்காக கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக சிவில் விமான சேவைகள், ஏற்றுமதி வலய அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.வீ. சானக தெரிவித்தார்.

மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுடன் அதன் அபிவிருத்தி தொடர்பாக கண்காணிப்பு, மேற்பார்வை விஜயமொன்றினை மேற்கொண்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இந்த விபரங்களைத் தெரிவித்தார்.

“சிவில் விமான சேவைகள், ஏற்றுமதி வலய அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.வீ. சானக இங்கு மேலும் தகவல் தருகையில், நான்கு விமான சேவைகள் தற்பொழுது மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தினூடாக தமது விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு விருப்பத்தினைத் தெரிவித்துள்ளன.

மத்தல அபுதாபி விமான சேவை எதிர்வரும் வரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்தோடு ஸ்ரீலங்கன் விமான சேவையும் மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தினூடாக பல புதிய விமானப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது.

அவற்றில் மத்தல- மாலே, மத்தல- கஸகஸ்தான் விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம் தற்பொழுது மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமாக காணப்படுகிறது.

கொவிட் பாதுகாப்பு விமான நிலையமாகவும் தற்பொழுது சர்வதேச தரப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளது. தற்பொழுதுள்ள கொவிட் 19 நிலைமைக்கு மத்தியில் மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம் இதுவரை வரலாற்றில் கூடுதலாக விமானப் பயணிகளை கையாண்ட விமான நிலையமாகவும் திகழ்ந்து காணப்படுகிறது.

இவற்றோடு பொருட்களை பரிமாற்றம் செய்வதிலும் அண்மையில் பாரிய முன்னேற்றத்தினை இவ்விமான நிலையம் அடைந்துள்ளது. மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தை மையமாகக் கொண்டு விமான பராமரிப்பு தனியான பிரிவொன்றையும் ஆரம்பிப்பதற்கு விருப்பத்தினை தெரிவித்துள்ள சர்வதேச நிறுவனம் ஒன்றுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறோம்.

மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தை கேந்திரமாகக் கொண்டு சுற்றுலாத் துறையின் பாரிய அபிவிருத்திக்கும் பிரதேச விவசாய உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” எனவும் பிரதி அமைச்சர் சானக இங்கு கருத்துத் தெரிவித்தார்.

எம். இர்பான் ஸகரியா

No comments:

Post a Comment