இலங்கை கால்பந்தாட்ட அணியினரை மாலைதீவில் சந்தித்து உபதேசம் வழங்கிய சனத் ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

இலங்கை கால்பந்தாட்ட அணியினரை மாலைதீவில் சந்தித்து உபதேசம் வழங்கிய சனத் ஜயசூரிய

எம்.எம்.சில்வெஸ்டர்

இலங்கையின் பெயரை உலகம் முழுவதும் எடுத்துச் சென்ற பெருமைக்குரிய இலங்கையின் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சனத் ஜயசூரிய இலங்கை கால்பந்தாட்ட அணியினருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மாலைத்தீவில் உள்ள இலங்கை கால்பந்தாட்ட அணியினரை சந்தித்து பேசினார்.

மாலைத்தீவின் மாலே நகரில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை கால்பந்தாட்ட அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்வில் கண்ட வெற்றிகள் மற்றும் அதன் மூலமாக கிடைத்த அனுபவங்களை இலங்கை கால்பந்தாட்ட அணியினருடன் பகிர்ந்து கொண்டார்.

கால்பந்தாட்டம் மாத்திரமல்ல எந்தவொரு விளையாட்டையும் எடுத்துக் கொண்டாலும் தியாகம் மற்றும் முயற்சி ஆகியன இருக்குமென்றால் வெற்றியை நோக்கி செல்லுதல் மிகவும் இலகுவானதாகும் என சனத் ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

தம்மிடம் உள்ள குறைகளை நினைத்துக் கொண்டு கவலைப்படுவதை விட, தம்மிடம் உள்ள திறமையின் மூலம் உச்சபட்ச பயனை அடைவதற்கு விளையாட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், பயிற்றுநர் குழாம் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, சனத் ஜயசூரியவுக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவரால் இலங்கை கால்பந்தாட்ட அணியின் டி ஷேர்ட்டொன்று நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment