உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள சிபாரிசுக்கமைய முன்னுரிமை பட்டியலில் உள்ளோருக்கு "பூஸ்டர்" - அமைச்சர் கெஹலிய - News View

Breaking

Wednesday, October 6, 2021

உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள சிபாரிசுக்கமைய முன்னுரிமை பட்டியலில் உள்ளோருக்கு "பூஸ்டர்" - அமைச்சர் கெஹலிய

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் தகுதியுடைய தரப்பினருக்கு கொவிட் மூன்றாவது டோஸாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான விண்ணப்பத்தை ஆரம்பத்தில் அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

கடந்த வாரமளவில் இந்த தீர்மானத்தை மறுசீரமைத்திருந்தோம். உலக சுகாதார ஸ்தாபனம் சில சிபாரிசுகளை வழங்கியுள்ளது. குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த பரிந்துரைத்துள்ளது.

எமது சுகாதாரத் துறையினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதியளித்துள்ளது. அதேபோன்று சுகாதாரத் துறையின் கொவிட் தடுப்பு பிரிவில் சேவை செய்யும் ஊழியர்களுக்கும் இதனைப் பெற்றுக் கொடுக்க நாம் சிபாரிசு செய்துள்ளோம். இவைதான் தற்போதுள்ள தீர்மானம்.

ஆகவே, உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் மூன்றாவது டோஸை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

14 மில்லியன் இலக்காக இருந்த போதிலும் 6.8 மில்லியன் பேருக்கு அத்தியாவசியமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் சில சிபாரிசுகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்து கூறியுள்ளது. மாறாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் குறிப்பிடப்படுவது போன்று எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.

தேவையான நேரத்தில் அனைத்து தடுப்பூசிகளும் கிடைக்கப் பெற்றால் பகிரகப்படும் கருத்துகளை அடிப்படையாக கொண்டு தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியும். ஆகவே, கிடைக்கக் கூடிய அனைத்து தடுப்பூசிகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அபாயமான நிலை குறையும்.

என்றாலும், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் ஆலோசனைகளின் அடிப்படையில்தான் செயல்படுகிறோம் என்றார்.

No comments:

Post a Comment