தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ள இலங்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ள இலங்கை

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணி நாளையதினம் சுனில் சேஹ்த்ரி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மாலைத்தீவின் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலைத்தீவுகள் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் தொடர் மாலைத்தீவுகளின் நடைபெற்று வருகிறது.

விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, நாளைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

நேபாள அணியுடனான போட்டியில் 2 க்கு 3 என்ற கோல் கணக்கில் போராடித் தோல்வியடைந்த இலங்கை அணியினர் சற்று உத்வேகத்துடன் காணப்படுவார்கள். பங்களாதேஷ் அணியுடனான போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்ட இந்திய அணி, மனதளவில் சற்று ஏமாற்றத்துடனே உள்ளது.

ஆகவே, இந்திய அணிக்கெதிரான போட்டியில் ஆக்ரோஷம், நிதானம், தடுப்பாட்டம் , பந்து பரிமாற்றம் ஆகிய விடயங்களை கடைப்பிடித்து விளையாடினால் நல்ல முடிவு கிடைக்கும் என கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பங்களதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 1 க்கு 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தமை இந்திய அணிக்கு பலத்த ஏமாற்றமாகும்.

இப்போட்டியின் 26 ஆவது நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. பின்னர் 56 ஆவது நிமிடத்தின் போது பங்களாதேஷ் வீரர் பிஷ்வானந்த் கோஷுக்கு சிவப்பு அட்டைக் காண்பித்து வெளியேற்றப்பட்டதை அடுத்து 10 வீரர்களுடன் விளையாடி போட்டியின் 74 ஆவது நிமிடத்தில் கோலடித்து போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டமை இந்திய அணியினருக்கு மனதளவில் சற்று வேதனையாக விடயமாகும்.

இந்நிலையில், இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க வேண்டுமானால், பலமிக்க இந்தியா மற்றும் மாலைத்தீவுகள் அணியுடனான போட்டிகளில் வெற்றி பெறுவது கட்டாயம்.

மறுமுனையில், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதாயின் இலங்கை அணிக்கெதிரான போட்டி‍யில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியம்.

புள்ளிப் பட்டியலில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள நேபாள அணி 2 ‍வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று முதலிடத்திலும், பங்களா‍தேஷ் அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு சமநிலையுடன் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளதுடன், ஒரு சமநிலையுடன் 1 புள்ளியை மாத்திரம் பெற்றுள்ள இந்திய அணி மூன்றாவது இடத்தில் தொடர்கிறது. நான்காம், ஐந்தாம் இடங்களில் மாலைத்தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் காணப்படுகிறது.

No comments:

Post a Comment