(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
மலையக மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை பெற்றுக் கொள்ள, மலையக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டும். அதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் எம். வேலுகுமார் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவிக்கையில், பெருந்தோட்டங்களில் உள்ள வைத்திய நிலையங்கள் செயற்பாட்டில் இல்லை. வைத்திய நிலையங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கொவிட் நிலைமையில் மக்களை பாதுகாப்பதற்கு இந்த வைத்திய நிலையங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கி இருக்கின்றதா?.
அத்துடன் மலையகத்தில் இருக்கும் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களை தேசிய சுகாதார சேவைக்குள் கொண்டுவருவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம். பாராளுமன்றத்தில் இருக்கின்ற சுகாதார துறைசார்ந்த மேற்பார்வை குழுவினூடாக முற்றுமுழுதான அறிக்கை தயார் செய்து பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக இது தொடர்பான எந்த முன்னெடுப்புக்களும் இடம்பெறவில்லை. எனவே தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினூடாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா?
மேலும் எமது காலத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட வீடுகளை விமர்சித்த நீங்கள் தற்போது அந்த வீடுகளை மக்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.
இதற்க ராஜாங்க அமைச்சர் பதிலளிக்கையில், பெருந்தோட்டங்களில் இருக்கும் வைத்திய நிலையங்கள் மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றன. இது அண்மையில் இடம்பெற்றதொன்று அல்ல. பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை இருந்து வருகின்றது. இதற்கு ஒரு தீர்வு எடுப்பதாக இருந்தால், மலையகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களும் இணைந்து மலையக மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை குறிப்பிட்டு சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டும்.
மேலும் பெருந்தோட்ட மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள செல்வதற்கு போதிய போக்கு வரத்து வசதி இல்லாமல் இருந்தது. அதனால் பிரஜா சக்தி கொராேனா தடுப்பூ பிரிவை உருவாக்கினோம். அதில் ஆயிரத்தி 100 க்கும் அதிகமானவர்கள் தொண்டர்களாக பணி செய்தார்கள். தடுப்பூசி ஏற்ற செல்ல வசதி இல்லாதவர்களுக்கு இவர்கள் உதவி வந்தார்கள்.
அத்துடன் கடந்த அரசாங்க காலத்தில் 699 வீடுகள்தான் பூரணமாக கட்டி மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் பதவிக்கு வந்த ஒன்றரை வருடங்களில், நீங்கள் 5 வருடங்களில் செய்யாத வேலையை செய்து முடித்திருக்கின்றோம்.
மீதமிருக்கும் 3 ஆயிரத்தி 301 வீடுகளுக்கும் தேவையான தண்ணீர், மின்சார வசதிகளை செய்து வருகின்றோம். இன்றைக்கு ஆயிரத்தி 235 வீடுகளை ஒப்படைத்திருக்கின்றோம். இந்த மாதத்துக்குள் 4 ஆயிரம் வீடுகளை மக்களுக்கு ஒப்படைப்போம். நீங்கள் அரைகுறையாக விட்டுச் சென்ற வீடுகளை நாங்கள் பூரணப்படுத்தி இருக்கின்றோம்.
அத்துடன் மலையத்தில் இருக்கும் வைத்திய நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளை தேசிய சுகாதார சேவைக்குள் கொண்டுவருவதற்கு கடந்த அரசாங்கத்தில் மேற்கொண்டிருந்த பணி தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அது தொடர்பில் இரு தரப்பினரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment