(ஆர்.யசி)
இந்தியாவின் பூரண ஒத்துழைப்பில் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட சகல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கல்வி, சுகாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லாவிடத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றிகளை தெரிவித்துள்ளது.
அத்தோடு மலையக மக்களுடன் தொடர்ந்தும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மலையகத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் நலன்களிலும் இந்தியா தொடர்ந்தும் கைகொடுக்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா வாக்குறுதியளித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இன்று பிற்பகல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுபினர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்திய வெளிவிவகார செயலாளருடன், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்திய அரசாங்கத்தினால் மலையகத்திற்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்கள் குறித்தும், வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட மலையக தமிழ் மக்களின் நலன்கள் சார் விடயங்களை இந்த சந்திப்பில் கலந்துரையாடியிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன் தெரிவித்திருந்தார்,
இந்தியாவினால் முன்னெடுக்கப்படும் மலையகத்தின் நான்காயிரம் வீட்டுத்திட்டம் குறித்தும், இன்றைய தினம் மலையகத்தில் கையளிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் குறித்தும் எமது நன்றிகளை தெரிவித்திருந்தோம். காலையில் இந்த நிகழ்வு அலறி மாளிகையில் இடம்பெற்றது.
ஆகவே இந்த வேலைத்திட்டங்களில் இந்தியாவின் முழுமையான உதவிகள் கிடைத்தமைக்கு நாம் நன்றிகளை தெரிவித்திருந்தோம் எனக் கூறிய அவர், மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் வீடுகள் கையளிக்கப்பட்டிருந்ததுடன் பெயர் பலகை திறத்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. இந்த செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதேபோல் புசல்லாவை சரஸ்வதி மகளிர் வித்தியாலய கட்டிடமொன்றை உருவாக்கும் வேலைத்திட்டமும் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. அது குறித்தும் பேசியிருந்தோம்.
அதேபோல் மலையக மக்களின் வாழ்வாதாரத்திற்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் இந்தியாவின் பூரண ஒத்துழைப்புகள் வேண்டும் எனவும், எதிர்கால வீட்டுத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம்,
மலையகத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் நலன்களிலும் இந்தியா தொடர்ந்தும் கைகொடுக்கும் எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா எமக்கு வாக்குறுதியளித்தார் என்றார்.
No comments:
Post a Comment