ஜனாதிபதியின் கைகளிலேயே இறுதித் தீர்மானம் : அண்ணனுக்கே அனுபவம் அதிகமாம் - பங்காளிக் கட்சிகளின் தீர்மானங்கள் 23 இல் வெளிவரலாம்? - News View

Breaking

Wednesday, October 20, 2021

ஜனாதிபதியின் கைகளிலேயே இறுதித் தீர்மானம் : அண்ணனுக்கே அனுபவம் அதிகமாம் - பங்காளிக் கட்சிகளின் தீர்மானங்கள் 23 இல் வெளிவரலாம்?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் பல்வேறு தீர்மானங்களில் ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதியுடனான சந்திப்பு நிராகரிக்கப்பட்டமையை அடுத்து அரசாங்கத்திற்குள் பல்வேறு முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தனித்து களமிறங்குவதா அல்லது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக என்பதை ஜனாதிபதியின் தீர்மானங்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அரசியல் தீர்மானங்கள் எடுப்பதில் அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் தொடர்ச்சியாக முரண்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மூலமாக இந்த தீர்மானங்களை மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பங்காளிக் கட்சிகளின் தீர்மானம்
இந்நிலையில் எதிர்வரும் மாகாண சபை தேர்தலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்திற்குள் அழுத்தம் கொடுக்கும் சக்தியாக மாறுவதற்கான தீர்மானங்களை பங்காளிக் கட்சிகள் எடுத்துள்ளனர். குறிப்பாக அடுத்த ஆண்டில் மாகாண சபை தேர்தலை நடத்த நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேர்தலை தனித்து சந்திக்க ஏற்கனவே தீர்மானம் எடுத்துள்ள நிலையில் ஆளுந்தரப்பு ஏனைய பங்காளிக் கட்சிகளும் இப்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைய முடியுமா என்பது குறித்து ஆராய தயாராகியுள்ளதாக தெரிய வருகின்றது.

குறிப்பாக “ஜனாதிபதியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் கிடைக்காத நிலையில், மாகாண சபைகளுக்கான தேர்தலில் பங்காளிக் கட்சிகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பயணிப்பதும் அல்லது தனித்து மூன்றாம் அணியாக களமிறங்குவதும் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை பொருத்தது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அதேபோல் அரசாங்கத்திற்குள் ஏராளமான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தில் தீர்மானம் எடுக்கும் ஒரு சிலர் நாட்டுக்கு பொருத்தமில்லாத தீர்மானங்களை எடுப்பதும், அமைச்சரவையில் அது குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுக்காது தம்மை நிராகரிப்பதும், அதேபோல் கேள்வி எழுப்பும் பங்காளிக் கட்சி தலைவர்களை விமர்சிப்பதும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அது குறித்து ஜனாதிபதி இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இது குறித்து கூறுகையில், “அரசாங்கத்தை பலவீனப்படுத்த தாம் ஒருபோதும் நினைக்கவில்லை, அரசாங்கத்தை பலப்படுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இலக்கை நோக்கி நாட்டை கொண்டு நடத்த தயாராக உள்ளோம், எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தீர்மானங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகளாக அடுத்த கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

அண்ணனுக்கே அனுபவம் அதிகம் என்றாராம் ஜனாதிபதி
இந்நிலையில் ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அமைச்சரவையை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தாத நிலையில் வாரத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையேனும் ஜனாதிபதிக்கும் ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் இடையிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள், நாட்டிற்கு அவசியமான தீர்மானங்கள், பிரச்சினைகள் மற்றும் பொதுக் காரணிகளை கலந்துரையாட இந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி வந்த நிலையில், கெரவலபிட்டிய மின் நிலைய விவகாரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதியுடன் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து கலந்துரையாட தீர்மானித்திருந்ததாகவும், எனினும் தன்னை விடவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவிற்கும் இந்த விடயங்களில் அனுபவம் அதிகமாக இருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் பங்காளிக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

23ஆம் திகதி தீர்மானங்கள் வெளிவரலாம்
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் எதிர்வரும் சனிக்கிழமை 23ஆம் திகதி ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் மீண்டும் கூடி தமது தீர்மானங்கள் குறித்து ஆராயவுள்ளனர்.

குறிப்பாக ஜனாதிபதி சந்திப்பை நிராகரித்தமை, பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் சந்திப்புகள் அவசியமா என்ற காரணிகளை ஆராயவுள்ளதாகவும், குறிப்பாக மாகாண சபை தேர்தலில் அரச பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆராயப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

கேசரி 

No comments:

Post a Comment