அரசாங்கதிற்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் உக்கிரம் : வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்க மந்திர ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 20, 2021

அரசாங்கதிற்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் உக்கிரம் : வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்க மந்திர ஆலோசனை

அரசாங்கதிற்குள் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்குவது குறித்தும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் வெற்றிலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை அடுத்து ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் தொடர்ச்சியாக கூடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அரசாங்கத்தின் தீர்மானங்கள், நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்து வருகின்ற நிலையில் தற்போது மாகாண சபைத் தேர்தல் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் பங்காளிக் கட்சிகள் கேட்டுக் கொண்ட சந்திப்பு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் பங்காளிக் கட்சிகள் சில மாற்று தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.

குறிப்பாக மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் அவர்களின் அரசியல் பின்புலத்தை வைத்துக் கொண்டு ஏனைய பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியாக களமிறங்கிப் பார்க்கலாம் என்ற யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாம்.

வெற்றிலை சின்னத்தில் மீண்டும் களமின்றங்கி தமது பலத்தை நிருபிக்கவும், அரசாங்கத்துடன் பேரம் பேசும் தீர்மானமிகு அணியாக தம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்ற கருத்துக்கள் பங்காளிக் கட்சிகளின் சந்திப்புகளில் ஆராயப்பட்டுள்ளதாம்.

எனினும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆரம்பத்தில் இதனை நிராகரித்த போதும் தற்போது அவர்களின் மத்திய குழுவிலும் இந்த யோசனைக்கு ஆதரவாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பங்காளிக் கட்சிகளின் தீர்மானங்களில் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுதியான தீர்மானங்கள்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூடிய வேளையில் இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து களமிறங்க வேண்டும் என்ற தீர்மானத்தை பலர் முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கி கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களை பலப்படுத்தவும், மீண்டும் கட்சியை சரியான திசைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என கட்சிக்குள் ஒரு இணக்கத்திற்கு வந்துள்ளதாகவும், எனினும் அடுத்த கட்டங்களில் இது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளதாக மத்திய குழுவின் உறுப்பினர்கள் மூலமாக தெரியவருகின்றது.

கேசரி

No comments:

Post a Comment