(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஆளணியினருக்கான 100 வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, குறித்த வைத்தியசாலையில் திடீர் விபத்து பிரிவை நிர்மாணிக்கும் நடவடிக்கை 2023 ஆம் ஆண்டே முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ். ஸ்ரீதரன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வலவிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் சார்பாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் 519 ஆக உள்ள நிலையில் 419 ஊழியர்களே பணியில் உள்ளனர். இதனால் அங்கு ஆளணியினருக்கான 100 வெற்றிடங்கள் உள்ளன.
இதேவேளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் திடீர் விபத்து பிரிவை நிர்மாணிக்க 2019-02-15 ஆம் திகதி அடிக்கல் நடப்பட்ட போதும் அதற்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை.
கொரோனா கால சூழ்நிலையால் புதிய கட்டிட நிர்மாணங்கள் 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாலேயே இதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டே திடீர் விபத்து பிரிவை நிர்மாணிக்க நிதி ஒதுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment