இந்தியாவிற்கு வாக்குறுதியளித்தது போல் 13ஆம் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? : மனுஷ நாணயக்கார - News View

Breaking

Thursday, October 7, 2021

இந்தியாவிற்கு வாக்குறுதியளித்தது போல் 13ஆம் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? : மனுஷ நாணயக்கார

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தேசிய ரீதியில் எந்த பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காது 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு வாக்குறுதியளித்துள்ளதா? இந்தியாவிற்கு வாக்குறுதியளித்தது போல் 13ஆம் திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா? என பிரதான எதிர்க்கட்சி சபையில் கேள்வி எழுப்பியது. எனினும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பை சபையில் ஆளுந்தரப்பினர் முன்வைக்கவில்லை.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மீதான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்கார, இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் விஜயம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதன்போது அவர் கூறுகையில், சபையில் உரையாற்றும் தமிழ் அரசியல் தரப்பினர் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நேற்றையதினம் (நேற்று முன்தினம்) ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளருடன் பேசிய விடயங்கள் குறித்து இலங்கை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றையதினம் இந்தியாவின் தரப்பில் ஒரு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பினர் வாக்குறுதியளித்ததாக அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் நாம் கேட்பது என்னவென்றால், இங்கு தேசிய மட்டத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது இந்தியாவிற்கு மாத்திரம் வாக்குறுதி வழங்கிய ஏதேனும் விடயங்கள் உள்ளதா? வாக்குறுதிகளுக்கு அமைய தீர்மானங்கள் எடுக்கப்படுமா என அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என சபையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, எதிர்க்கட்சி தலைவர் மூலமாக 27/2 எதிர்க்கட்சி தலைவர் கேள்வியொன்றை முன்வைத்தால் நாம் அரசாங்கமாக இதற்கு பதில் தெரிவிப்போம் என்றார்.

No comments:

Post a Comment