1,334 கிலோ கிராம் மஞ்சளை கைப்பற்றிய இலங்கை கடற்படை - இரு சம்பவங்களில் 3 சந்தேகநபர்கள் கைது - படகொன்றும், லொறி ஒன்றும் மீட்பு - News View

Breaking

Saturday, October 2, 2021

1,334 கிலோ கிராம் மஞ்சளை கைப்பற்றிய இலங்கை கடற்படை - இரு சம்பவங்களில் 3 சந்தேகநபர்கள் கைது - படகொன்றும், லொறி ஒன்றும் மீட்பு

இன்று காலை (02) யாழ்ப்பாணம், குருநகர் மற்றும் கல்பிட்டி கடற்கரை பகுதியில் மேலும் மூன்று சந்தேகநபர்களுடன் 1,334 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை கடற்படை கைப்பற்றியுள்ளது.

இலங்கை கடற்படையினர் கடந்த இரண்டு நாட்களில் (செப்டம்பர் 30 மற்றும் ஒக்டோபர் 01), நாடு முழுவதும் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4,940 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சளை கைப்பற்றியுள்ளது.

இன்று காலை (02), இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையினர் யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், கரையை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை சோதனையிட்டபோது, கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயற்சி செய்யப்பட்ட, 12 கோணிகளில் அடைக்கப்பட்டிருந்த 800 கிலோ 632 கிராம் உலர் மஞ்சளுடன் கடற்படையினரால் சந்தேக நபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமேற்கு கடற்படை கட்டளையினர் இன்று அதிகாலை (02) கல்பிட்டி சிறிய கடற்கரையில், கரையை நோக்கி வந்த படகுகள் சிலவற்றை சோதனையிட்டுக் கொண்டிருந்த நிலையில், குறித்த பகுதியில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு, லொறி ஒன்றில் ஏற்றிச் செல்ல தயார் செய்யப்பட்டிருந்த 20 உரப் பைகளில் அடைக்கப்பட்ட 702 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் லொறியையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

அதற்கமைய, யாழ்ப்பாணம் மற்றும் கல்பிட்டியவில் இன்று காலை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட 1,334 கிலோ 800 கிராம் உலர்ந்த மஞ்சளை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 45 வயதுக்குட்பட்ட பேசாலை மற்றும் கல்பிட்டியவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள், படகு, லொறி மற்றும் சந்தேகநபர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் மற்றும் கட்டுநாயக்க சுங்க அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment