கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரே இரவில் தரமுயர்த்துவதற்கு தயாராக உள்ளோம் : முறையான இராஜ தந்திர அரசியல் முஸ்லிம்களிடத்தில்தான் உள்ளது என்கிறார் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 2, 2021

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரே இரவில் தரமுயர்த்துவதற்கு தயாராக உள்ளோம் : முறையான இராஜ தந்திர அரசியல் முஸ்லிம்களிடத்தில்தான் உள்ளது என்கிறார் வியாழேந்திரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரே இரவில் தரமுயர்த்துவதற்கு தயாராக உள்ளோம், ஆனால் நல்லிணக்க அரசியல் என்று முஸ்லிம் காங்கிரசும், தமிழ் அரசியல்வாதிகளும், கட்டிப்பிடித்துக் கொண்டு செயற்படுகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உள்ளிட்டவர்கள் ஒரு பிரச்சினையும் இல்லை என ஒரு வார்த்தை சொன்னால் நாளையே, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாட்டம் போரதீவுப் பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவில் 24 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (30) வெல்லாவெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஸ்ட்ட மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சேவைகளை மக்களின் காலடிக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என அரசாங்கம் செயற்படுகின்றது.

கடந்த அரசாங்க காலத்தில் தேர்தலை மையமாக வைத்து கொண்டு வரப்பட்ட வீட்டுத் திட்டங்களால் தற்போது அவை அரைகுறையாக கிடக்கின்றன. இதனால் பல சமூகப் பிரச்சினைகளும் எழுந்துள்ளன. இதனால் அந்த மக்கள் கடனாளியாக்கப்பட்டுள்ளனர். 

அப்போதைய அரசாங்கம் தேர்தலுக்காக வேண்டி நிதி அமைச்சின் அனுமதியின்றி, திட்டமிடல் உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் பதவிகளையும் வழங்கினர்கள். தற்போது அவர்கள் தொழிலின்றி இருக்கின்றார்கள்.

அப்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்ததற்காக வேண்டி எதுவித அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் வழங்கவில்லை. 

மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. அப்போது 16 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருக்கா விட்டால் அப்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியிருக்க முடியும். நினைத்ததை சாதித்திருக்க முடிந்திருக்கும். 

அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உள்ளிட்ட விடயங்களை செய்திருக்க முடியும். முறையான இராஜ தந்திர அரசியல் முஸ்லிம்களிடத்தில்தான் உள்ளது.

முஸ்லிங்களின் இறந்த உடலை எரிக்கக்கூடாது புதைக்க வேண்டும் என்பதற்காக தமிழர்களின் போராட்டத்தில் இணைந்தார்கள், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.

(பெரியபோரதீவு நிருபர்)

No comments:

Post a Comment