அரசாங்க கணக்குக் குழுவின் இரண்டாவது அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது : 10% இற்குமேல் கல்விக்கு செலவிடப்பட்டாலும் சில பாடசாலை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

அரசாங்க கணக்குக் குழுவின் இரண்டாவது அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது : 10% இற்குமேல் கல்விக்கு செலவிடப்பட்டாலும் சில பாடசாலை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் இரண்டாவது அறிக்கை இன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவினால் இன்று (06) பாராளுமன்றத்தில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 119ஆவது நிலையியற் கட்டளைக்கு அமை இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட 16 விசாரணைகளில் கிடைக்கப் பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பொதுமக்களினால் அதிகம் பேசப்பட்ட முத்துராஜவல ஈரநிலத்தின் தற்போதைய நிலை மற்றும் யானை மனித மோதல்கள் போன்ற காலத்துக்கு ஏற்ற பிரச்சினைகள் குறித்து இந்த அறிக்கையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீதிப் பாதுகாப்புத் தொடர்பில் கணிசமான கடமைகளை மேற்கொள்கின்ற இலங்கை பொலிசுக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக வீதி விபத்துக்களில் அரைவாசியைக் குறைக்கக் கூடிய ஆற்றல் அற்றுப்போவது தொடர்பிலும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையை ஒரு ஆணைக்குழுவாக மாற்றுவதற்குத் தேவையான அவசியம் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யானை மனித மோதலுக்குத் தீர்வாக ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஏற்றவாறு கலப்புமுறைகளைப் பின்பற்றக்கூடிய இயலுமை காணப்படுவதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொக்டர் பிரிதிவிராஜ் பெர்னாந்து அவர்களால் முன்வைக்கப்பட்ட கிராமத்தைச் சுற்றி மின்சாரவேலிகள் அமைக்கும் திட்டத்தை குறைந்த செலவுடன் தற்பொழுது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த வேலிகளைப் பராமரிப்பதற்காக கிராமவாசிகளுக்கு நிதிப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது அவசியமானது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வருடாந்த அரச வருமானத்தில் 10% இற்குமேல் கல்விக்காக செலவிடப்பட்டாலும் சில பாடசாலை மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதில்லை என்றும் குழு தனது அவதானிப்பை முன்வைத்துள்ளது.

நாட்டின் கல்வித் துறையில் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், இந்த நிலைமையை நீக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியின் போது வற் வரி குறைவாகக் கணக்கிடப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுங்க விசாரணையில் 205 மில்லியன் ரூபாவை அபராதம் விதித்து அதனை அறவிட்டு்ளளமை தொடர்பாகவும் குழு கவனம் செலுத்தியுள்ளது. 

அவ்வாறு குறைவாகக் கணக்கிடப்பட்ட வற் வரியை மேலதிக வரியாக அறவிடுவதற்குப் பதிலாக அபராதமாக அறவிடப்பட்டுள்ளதால் அரசாங்கத்துக்கு 125.5 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பாகவும் குழுவினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

2021 மார்ச் 30ஆம் திகதியில் (உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் Legacy முறைமைக்கமைய) அடையாளங்காணப்பட்ட நிறுவனங்களோடு தொடர்புடையதான நிலுவை வரி 18 பில்லியன் ரூபா என்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 424 மில்லியன் மட்டுமே அறவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் RAMIS முறைமைக்கு அமைய அன்றைய தினத்துக்கு இருந்த நிலுவைவரித் தெகையானது 87 பில்லியன் ரூபாவாகும். இந்தத் தொகையில் 4 பில்லியன் ரூபா மட்டுமே அறவிடப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கலைப்பீட பட்டதாரிகளில் வேலை வாய்ப்பற்றோர் வீதம் அதிகரித்துச் செல்வதானல் இதனைத் தீர்ப்பதற்காக கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்றின் தேவைப்பாடும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமை வகிக்கும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் 22 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

No comments:

Post a Comment