அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலம் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதையே அறிவுடையவர்களின் விலகல் வெளிக்காட்டுகிறது : ஆசிரியர்களை அவமதிக்க வேண்டாமென மஹிந்தானந்தவிடம் கேட்டுக் கொள்கின்றோம் - துஷார இந்துனில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 8, 2021

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலம் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதையே அறிவுடையவர்களின் விலகல் வெளிக்காட்டுகிறது : ஆசிரியர்களை அவமதிக்க வேண்டாமென மஹிந்தானந்தவிடம் கேட்டுக் கொள்கின்றோம் - துஷார இந்துனில்

(நா.தனுஜா)

கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான விசேட செயலணியில் தகுதியற்றவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக பிரபல தொற்று நோய்த் தடுப்பு விசேட வைத்திய நிபுணரான ஆனந்த விஜேவிக்ரம அந்த செயலணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார். அவரைப்போன்ற போதிய தேர்ச்சியுடைய பலர் ஏற்கனவே விலகியிருக்கின்றார்கள். தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாது என்பதையும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலம் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதையுமே தொற்றுப் பரவல் குறித்த அறிவுடையவர்களின் விலகல் வெளிக்காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதியினால் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதுடன் அவற்றின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் எமது நாட்டில் ஏற்கனவே பல்வேறு சட்டங்கள் அமுலில் உள்ளன.

அவ்வாறிருக்கையில் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதிலிருந்து, உண்மையிலேயே பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்குகின்றதா? அல்லது இந்தத் தொற்றுப் பரவலைப் பயன்படுத்தி அரசாங்கம் அதன் வழமையான அடக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றதா? என்ற வலுவான சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்குவதற்கும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தம்மிடம் ஆட்சியதிகாரத்தைக் கையளிக்குமாறு கடந்த தேர்தல்களின்போது தற்போதைய அரசாங்கம் கோரியது.

அதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் வெற்றி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, அதனூடாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் உள்ளிட்ட அனைத்தையும் நாட்டு மக்கள் வழங்கினார்கள்.

ஆனால் இவற்றின் மூலம் பெற்றுக் கொண்ட மட்டு மீறிய அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் பொதுமக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருகின்றது. அதுமாத்திரமன்றி ஊடகவியலாளர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுப்பதுடன் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் வலுப்பெற்று வருகின்றன.

இதுவரையான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்த ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இவ்வாறு தமது செயற்பாடுகளை விமர்சிப்பவர்களையும் தமக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுபவர்களையும் அடக்குவதற்காகவே அரசாங்கம் அவசரகாலச் சட்டம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கின்றது.

அதேபோன்று பிரதான சீனி இறக்குமதியாளர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு மிக நெருக்கமானவர்களாக இருக்கும் சூழ்நிலையில், அரசாங்கம் நினைத்திருந்தால் இலகுவாக சீனியின் விலையைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். இருப்பினும் சீனியைப் பதுக்கியதால் அதற்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைப் போன்றும் அதனைத் தொடர்ந்து சீனியின் விலை அதிகரித்தவுடன் தாம் பதுக்கப்பட்ட சீனியைக் கண்டறிந்து விலைகளைக் கட்டுப்படுத்துவதைப் போன்றும் அரசாங்கம் ஓர் கபட நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த காலத்தில் 85 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனிக்கு தற்போது 125 ரூபா என்ற நிர்ணயவிலை தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களே நன்மையடைகின்றார்கள். மாறாக பொதுமக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

பசில் ராஜபக்ஷ வந்ததும் பெற்றோல் விலையும் உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடையும் என்று கூறினார்கள். ஆனால் அவர் நிதியமைச்சராகப் பதவியேற்று இரு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அஜித் நிவாட் கப்ரால் அவரது அமைச்சு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகி, மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்ததன் மூலம் அதற்கான ஓய்வூதியத்தையும் பெற்றுக் கொண்டு, தற்போது மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக முயற்சிக்கின்றார்.

அடுத்ததாக கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கென விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டு, தகுதியற்றவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. அதன் விளைவாக பிரபல தொற்று நோய்த் தடுப்பு விசேட வைத்திய நிபுணரான ஆனந்த விஜேவிக்ரம அந்த செயலணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார்.

தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாது என்பதையும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலம் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதையுமே தொற்றுப் பரவல் குறித்த அறிவுடையவர்களின் விலகல் வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் விளைவாகவே கொவிட்-19 வைரஸ் பரவல் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகின்றார். அதுமாத்திரமன்றி சுமார் 600 ஆசிரியர்கள் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் 25 ஆசிரியர்கள் தொற்றினால் உயிரிழந்திருப்பதாகவும் கூறுகின்றார். அவ்வாறெனின், தொற்றுக்குள்ளான அந்த 600 ஆசிரியர்களும் எங்கே இருக்கின்றார்கள் என்று அவரால் கூற முடியுமா?

அவ்வாறெனின் மங்கள சமரவீர, சுனில் பெரேரா உள்ளடங்கலாக கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் அனைவரும் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றதன் காரணமாகவா உயிரிழந்திருக்கின்றார்கள்? எனவே நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, தமது உரிமைக்காகப் போராடும் ஆசிரியர்களை அவமதிக்க வேண்டாம் என்று மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment