நல்லாட்சி அரசாங்கத்தின் வினைத்திறனற்ற பொருளாதார முகாமைத்துவமே தற்பேதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 8, 2021

நல்லாட்சி அரசாங்கத்தின் வினைத்திறனற்ற பொருளாதார முகாமைத்துவமே தற்பேதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வினைத்திறனற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் பொறுத்தமற்ற கொள்கைகள் காரணமாகவே கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொருளாதாரம் முதல் முறையாக வீழ்ச்சியடைய ஆரம்பித்தது 2015ஆம் ஆண்டிலாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்தவர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் செயல்பட்டிருக்காவிடின் இன்று நாம் கொவிட் தொற்றுக் காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது.

2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி எவ்வித சவால்களும் இல்லாத காலகட்டமாகும். நாட்டில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அவ்வாறான காலகட்டத்திலேயே, மிகவும் சவால்களுக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வால் கட்டியெழுப்பப்பட்டிருந்த பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்திருந்தனர்.

2019ஆம் ஆண்டு நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டிருந்த தருணத்தில் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்ததுடன், திறைசேரியும் மிகவும் மோசமானதாகவே இருந்தது. இதனை சரி செய்வதற்கான முயற்சிகள் ஜனாதிபதியால் எடுக்கப்பட்டிருந்த சில மாதங்களிலேயே நாடு கொவிட் தொற்றுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

கொவிட் தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டில் மாத்திரம் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக 350 பில்லியன் நிதியை சுகாதாரத் துறைக்காக செலவிட்டுள்ளது. மக்களுக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். சவால்களுக்கும் செலவுகளுக்கும் மத்தியில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு சதம் கூட குறைக்கவில்லை. ஓய்வூதியத்தை துண்டிக்கவும் இல்லை.

எனவே கொவிட் பிரச்சினைக்கு மத்தியில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இறுதி காலாண்டு முதல் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புத்தெழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான பல முன்மொழிவுகளை உள்ளடக்கி இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment