பௌத்த வர்ணமல்ல, ஆரம்ப பாடசாலை மாணவர்களை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் வர்ணமே பயன்படுத்தப்பட்டுள்ளது - அங்கஜன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

பௌத்த வர்ணமல்ல, ஆரம்ப பாடசாலை மாணவர்களை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் வர்ணமே பயன்படுத்தப்பட்டுள்ளது - அங்கஜன்

பிள்ளையார் கோவில் குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. அது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தினை புனரமைக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக வர்ணப்பூச்சுப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த வர்ணங்கள் பௌத்த கொடியினை பிரதிபலிப்பதாக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன்.

அதற்கு, குறித்த நிறங்கள் ஒலிம்பிக் கொடியினை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவை அருகில் உள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவர்களை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எனவே இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும்போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment