அஜித் நிவாட் கப்ராலின் நியமனம் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்கும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

Breaking

Tuesday, September 14, 2021

அஜித் நிவாட் கப்ராலின் நியமனம் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்கும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(நா.தனுஜா)

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை அரசாங்கம் நியமித்திருப்பது சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினை மேலும் தீவிரமடையச் செய்வதற்குமே அது வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச நிதி தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டியது மத்திய வங்கியேயாகும். இவற்றை அரசியல் தலையீடுகளின்றி மேற்கொள்ள வேண்டும். சுயாதீனமாக செயற்படுகின்ற மத்திய வங்கிகள் நாட்டு மக்களுக்கு சிறந்த பொருளாதார கட்டமைப்பை உருவாக்கிக் கொடுத்திருப்பதை உலக நாடுகளின் செயற்பாடுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இலங்கை மத்திய வங்கியின் நம்பகத் தன்மைக்குப் பங்கம் ஏற்படும் வகையில் இருண்ட வரலாற்றுப் பதிவுகளை கொண்ட ஒருவரை ஆளுநராக நியமிக்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் செயற்பாடானது இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைவதற்கே வழிவகுக்கும்.

இந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவிருக்கின்ற அஜித் நிவாட் கப்ரால் ஒருபுறம் பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதோடு அதே அரசாங்கத்தின் நிதி இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்தவராவார்.

மத்திய வங்கி ஆளுநரை நியமிப்பது தொடர்பான சர்வதேச தரப்படுத்தலுக்கு அமைவாக நோக்குகையில் அவரை இப்பதவிக்கு நியமிக்கக் கூடாது என்பதற்கு இதனை முக்கிய காரணமாகக் குறிப்பிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment