போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 25, 2021

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு

சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்புக்களை முடக்குவதற்காக இலங்கை அரசு, பாதுகாப்பு அமைச்சினூடாக தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் காரணமாக இலங்கை உட்பட பிராந்திய நாடுகள் அனைத்திற்கும் சாதகமானதாக அமைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் ஐ.நாவுக்கான இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவுக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போதே ஹனா சிங்கர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தலைவர் அலன் கோலும் கலந்து கொண்டார்.

அண்மைக் காலங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக விளக்கமளித்த ஜெனரல் கமல் குணரத்ன, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சுமார் ஒரு டொன் அளவிலான போதைப்பொருட்கள் இலங்கையின் சட்ட அமுலாக்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை புதிய தலைமைதத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு பாதுகாப்பு செயலாளர் மேலும் விளக்கமளித்ததுடன் போதைபொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் உடனடியாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தற்போது காணப்படும் பெரும் தொற்று நிலைமையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டிய ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் சிங்கர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளையும் இதன்போது வரவேற்றார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்

No comments:

Post a Comment