மத்திய வங்கியில் உள்ள பிரச்சினைகளை கண்டு அழுது கொண்டிருக்க மாட்டேன், குறுகிய காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை சிறந்த முறையில் வெற்றி கொள்வேன் - அஜித் நிவாட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

மத்திய வங்கியில் உள்ள பிரச்சினைகளை கண்டு அழுது கொண்டிருக்க மாட்டேன், குறுகிய காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை சிறந்த முறையில் வெற்றி கொள்வேன் - அஜித் நிவாட் கப்ரால்

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். நாட்டுக்காக தொடர்ந்து சேவையாற்ற தயாராகவுள்ளேன். மத்திய வங்கியில் உள்ள பிரச்சினைகளை கண்டு அழுது கொண்டிருக்க மாட்டேன். குறுகிய காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை சிறந்த முறையில் வெற்றி கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரை பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை நேற்று திங்கட்கிழமை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய வங்கியில் பிரச்சினை உள்ளது. அங்கு பணிபுரியும் போது பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். அனைத்து பிரச்சினைகளுடன் பணிபுரிய என்னால் முடியும்.

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. என எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு முன்னர் எட்டு வருட காலமாக மத்திய வங்கியின் ஆளுநராக கடமை புரிந்துள்ளேன். ஒருபோதும் அரசியல் நோக்கத்துடனும், அரசியல் ஆதரவுடனும் செயற்படவில்லை.

பொருளாதாரத்தில் இனி மாற்றம் ஏற்படும் என்பதை எதிர்த்தரப்பினர் நன்கு அறிவார்கள். அதன் காரணமாகவே பல குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். ஆளுநர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் அழுது கொண்டிருக்க போவதில்லை. அனைத்து சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்வேன்.

2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்தமைக்காகவே நான்கு வருடத்திற்கு முன்னர் ஓய்வூதிய கொடுப்பனவை கோரினேன். நான் இன்னும் ஓய்வு பெறவில்லை.

சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கான அதிகாரங்கள் உண்டு. சர்வதேசத்துடன் தொடர்பு கொள்ளும் போது இந்த அதிகாரங்கள் சாதகமாக அமையும் என்பதற்காகவே புதிய ஆளுநர் பதவிக்கும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சருக்கான அதிகாரங்களை கோரினேன். இதனை ஜனாதிபதி விளங்கிக் கொள்வார் என எதிர்பார்க்கிறேன். பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்தில் எம்மால் சீர் செய்ய முடியும். என்றார்.

No comments:

Post a Comment