இறக்குமதி உத்தரவாதத் தொகை நிர்ணயத்தின் ஊடாக சந்தை ஏகாதிபத்தியவாதத்தை உருவாக்க அரசு முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 14, 2021

இறக்குமதி உத்தரவாதத் தொகை நிர்ணயத்தின் ஊடாக சந்தை ஏகாதிபத்தியவாதத்தை உருவாக்க அரசு முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தி

(நா.தனுஜா)

இறக்குமதி உத்தரவாதத் தொகை நிர்ணயத்தின் விளைவாக அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறுவதனைப் போன்ற பிரதிபலனைப் பெற்றுக் கொள்ள முடியாது. மாறாக பெரும் தனவந்தர்களும் செல்வாக்குடையவர்களும் மாத்திரமே இறக்குமதிகளை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுவதுடன் அதன் விளைவாக இறக்குமதியாளர்களிடையே 'சந்தை ஏகாதிபத்தியமொன்று' உருவாகும். அதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வெகுவாகப் பாதிப்படைவார்களே தவிர, அவர்களுடைய உற்பத்திகள் எவ்வகையிலும் ஊக்குவிக்கப்படாது. எனவே தமக்கு நெருக்கமானவர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்ற இந்த 'அரச மாஃபியா' உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் அந்நியச் செலாவணியை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியினால் இறக்குமதிக்கான நூற்றுக்கு நூறுசதவீத உத்தரவாதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனூடாக அநாவசியமான இறக்குமதிகள் குறைவடையும் என்றும் உள்நாட்டு உற்பத்திகள் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றார்கள். ஆனால் உத்தரவாதத் தொகை நிர்ணயத்தின் விளைவாக உண்மையில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறுவதனைப்போன்ற பிரதிபலனைப் பெற்றுக் கொள்ள முடியாது.

மாறாக பெரும் தனவந்தர்களும் செல்வாக்குடையவர்களும் மாத்திரம் முழுமையான உத்தரவாதத் தொகையைச் செலுத்தி இறக்குமதிகளை மேற்கொள்ளக் கூடிய நிலையேற்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடையே 'சந்தை ஏகாதிபத்தியமொன்று' உருவாகும். அதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வெகுவாகப் பாதிப்படைவார்களே தவிர, அவர்களுடைய உற்பத்திகள் எவ்வகையிலும் ஊக்குவிக்கப்படாது.

அதேபோன்று மறுபுறம் அரிசி, சீனி, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்திருப்பதுடன் சந்தையில் அவற்றுக்கான தட்டுப்பாடும் நிலவுகின்றது.

சீனி பதுக்கப்பட்டுள்ள இடங்களைச் சுற்றிவளைப்பதாக அரசாங்கம் கூறினாலும் உண்மையில் பதுக்கி வைத்திருப்பவர்களுக்குப் பணம் செலுத்தி அவற்றைக் கொள்வனவு செய்கின்ற நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதுமாத்திரமன்றி அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளைக் கண்காணிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமென அத்தியாவசியசேவைகள் ஆணையாளர் நாயகமொருவர் நியமிக்கப்பட்டிருந்தாலும், சந்தையில் பால்மா அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது. எனவே அரசாங்கம் ஏற்கனவே இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் பேசி வைத்து இத்தகைய நடவடிக்கைகளை அரங்கேற்றுவதுபோல் தெரிகின்றது.

அதுமாத்திரமன்றி உர இறக்குமதி நிறுத்தப்பட்டிருப்பதனால் விவசாயிகள் தமது பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான உரமின்றித் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் விளைவாக நாட்டில் நெல் உற்பத்திக்குப் பற்றாக்குறை ஏற்படுவதுடன் அதனையும் வெளிநாடுகளிலிருந்து பெருமளவிற்கு இறக்குமதி செய்யவேண்டிய நிலையே ஏற்படப்போகின்றது. எனவே இந்த 'அரச மாஃபியாவை' உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

'இருவேளை மாத்திரம் உணவு உட்கொண்டு வாழும் நிலைக்குத் தயாராகுங்கள்' என்று கூறுவதற்காக மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

மறுபுறம் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், அது குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் குற்றவாளிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அரசாங்கத்தின் இந்தப் போக்கிற்கு எதிராக கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க மதத் தலைவர்கள் தமது மிகக்கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றனர். விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றும் உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிய ஜனாதிபதி, பிரதமர் உள்ளடங்கலாகத் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றாத அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக மத்திய வங்கியின் ஆளுநர் பதவி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. அப்பதவியில் இருப்பவர் சுயாதீனத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என்பது பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.

ஆனால் கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அரசியலில் ஈடுபட்டிருந்த அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தினால் அர்ஜுன மகேந்திரன் ஆளுநராக நியமிக்கப்பட்டமையும் ஓர் அரசியல் ரீதியான நியமனமாகும்.

ஆனால் அதன் பின்னர் மத்திய வங்கியின் ஆளுநர்களாகப் பதவியேற்றுக் கொண்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் ஆகியோரின் நியமனங்கள் அரசியல் ரீதியான அபிப்பிராயபேதங்களுக்கு அப்பால் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகவே காணப்பட்டன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து, முன்னரங்க அரசியலில் ஈடுபட்ட அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதென்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயமாகும்.

எமது நாடு சர்வதேச கட்டமைப்புக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளபோது, இத்தகைய நியமனங்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment