அனைத்து வகையான மருந்துகளின் விலையை குறைத்து நிவாரணம் வழங்க நாங்களே நடவடிக்கை எடுத்தோம் : எந்த தெளிவும் இல்லாமல் பொய் தகவல்களை வெளியிட்டு சபையை பிழையாக வழிநடாத்தி இருக்கின்றார் - ராஜித்த சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, September 23, 2021

அனைத்து வகையான மருந்துகளின் விலையை குறைத்து நிவாரணம் வழங்க நாங்களே நடவடிக்கை எடுத்தோம் : எந்த தெளிவும் இல்லாமல் பொய் தகவல்களை வெளியிட்டு சபையை பிழையாக வழிநடாத்தி இருக்கின்றார் - ராஜித்த சேனாரத்ன

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

மருந்து மாபியா எமது காலத்தில் இடம்பெறவில்லை. நுகர்வோருக்கு அத்தியாவசியமான அனைத்து வகையான மருந்து பொருட்களின் விலையை குறைத்து நிவாரணம் வழங்குவதற்கு நாங்களே நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் 2015 முதல் 2019 வரையான காலத்தில் மருந்து பொருட்களை பாரிய விலைக்கு கொள்வனவு செய்திருப்பதாக தெரிவித்து மருந்து சம்பந்தமான இராஜாங்க அமைச்சர் சபையை பிழையாக வழிநடாத்தி இருக்கின்றார் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் காணாமல் போயிருக்கும் அல்லது அழிக்கப்பட்டிருக்கும் தரவுகளில் அதிகமானவை 2015 முதல் 2019 வரையான காலத்தில் மருந்து கொள்வனவு செய்த தரவுகளே காணாமல் போயிருப்பதாகவும், எமது காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மருந்து பொருட்கள் அதிக விலைக்கே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சபையில் அறிவித்திருந்தார்.

அத்துடன் அந்த மருந்து பொருட்களை மிகவும் விலை குறைந்தளவிலேயே இந்த அரசாங்கம் கொள்வனவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் எமது காலத்தில் அதிக விலைக்கு கொண்டுவரப்பட்ட மருந்து பொருட்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும்போதே தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் காணாமல் போயிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தி இருந்தார்.

எமது காலத்தில் கொண்டு வந்த மருந்து பொருட்கள் தொடர்பான தரவுகள் எதுவும் அழிக்கப்படவும் இல்லை. காணாமல் போகவும் இல்லை. அது அங்கு பாதுகாப்பாக இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் எமது நல்லாட்சி காலத்தில் நான் சுகாதார அமைச்சராக இருந்து 48 வகையான மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்ததால் நுகர்வோருக்கு 4.4 பில்லியன் இலாபம் கிடைத்தது.

அதேபோன்று மக்கள் அதிகம் பாவிக்கும் அனைத்து வகையான மருந்து பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

மேலும் புற்றுநோயாளிக்கு கடந்த அரசாங்க காலத்தில் 15 இலட்சம் ரூபா வரையே மருந்துக்கு செலவழிக்க வரையறை இருந்தது. அதனை நாங்கள் நீக்கி நோயாளி குணமடையும் வரை தேவையான மருந்தை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

சேனக பிபிலேயின் மருந்து கொள்கையை பயன்படுத்தியே இதனை செய்தோம். அதனால்தான் மக்களுக்கு குறைந்த விலைக்கு மருந்து பெற்றுக் கொடுக்க முடியுமாகியது.

இவ்வாறு மக்களுக்கு மருந்து நிவாரணம் பெற்றுக் கொடுத்த எங்களை மருந்து மாபியா செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே நாங்கள் கொள்வனவு செய்த மருந்து பொருட்களின் தரவுகள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் இந்த அரசாங்கத்தில் கொவிட் பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட என்.டி.ஜன் கொகுதிகள் தொடர்பான தரவுகளே காணாமல் போயிருக்கின்றது.

அத்துடன் இராஜாங்க அமைச்சர் மருந்து தொடர்பில் எந்த தெளிவும் இல்லாமல் சபைக்கு பொய் தகவல்களை வெளியிட்டு சபையை தவறாக வழிநடத்தி இருக்கின்றார் என ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment