(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதி சஹ்ரான் ஹசீம், கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய மொஹம்மட் முபாரக் ஆகியோரின் மனைவிமார் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை நீதிமன்றம் நீடித்தது.
ஷங்ரில்லா ஹோட்டல் மீதான தற்கொலை தாக்குதல், கிங்ஸ்பரி ஹோட்டல் மீதான தாக்குதல் தொடர்பிலான வழக்குகள் நேற்று கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஷங்ரில்லா ஹோட்டல் தாக்குதல் தொடர்பிலான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, அசார்தீன் மொஹம்மட் இல்மி, அப்துல் ஹமீட் மொஹம்மட் றிபாஸ், மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் ரிலா, மொஹம்மட் அமீர் எம். ஆயதுல்லாஹ், மொஹம்மட் முபாரக் மொஹம்மட் ரிபாயில் ஆகியோரின் விளக்கமற்யல் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டது.
இதன்போது சந்தேக நபர்களை ஸ்கைப் தொழில் நுட்பத்தின் மூலம் நீதிவான் மேற்பார்வை செய்தார்.
இதனிடையே, கிங்ஸ்பரி ஹோட்டல் தாக்குதலை நடாத்திய மொஹம்மட் முபாரக் எனும் தற்கொலைதாரியின் மனைவியான ஆய்ஷா சித்தீகா, உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியலும் எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.
சந்தேக நபர்களை ஸ்கைப் தொழில் நுட்பத்தில் மேற்பார்வை செய்து நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஆய்ஷா சித்திகாவுக்கு மேலதிகமாக, மொஹம்மட் வஸீம், அஹமது மொஹம்மது அர்ஷாத், அபூசாலி அபூபக்கர் ஆகியோரே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஏனையவர்களாவர்.
No comments:
Post a Comment