(எம்.எப்.எம்.பஸீர்)
மோசடியாக ஆவணங்களை தயார் செய்து, யானைகளை உடன் வைத்திருந்தமை தொடர்பிலான விவகாரத்தில், தற்போதும் வன ஜீவிகள் திணைக்கள பொறுப்பிலுள்ள 'சுஜீவா' எனும் யானையையும் அதன் குட்டியினையும் எந்த தரப்புக்கும் விடுவிப்பதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
வனஜீவிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இயற்கை, கலாசார கல்வி மையம் மற்றும் விலங்களுக்கன நீதி எனும் அமைப்பு ஆகியன தாக்கல் செய்த இரு எழுத்தாணை மனுக்களை (ரிட் மனு) பரிசீலனைக்கு எடுத்தே மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்தது.
குறித்த ரிட் மனு விசாரணைகள் முடியும் வரையில் குறித்த தடை அமுலில் இருக்கும் என மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா தலைமையில் தம்மிக கனேபொல உள்ளடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் அறிவித்தது.
குறித்த இரு ரிட் மனுக்கள் தொடர்பிலும் மனுதாரர் சார்பில் நேற்று மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, மோசடியாக ஆவணங்களை தயார் செய்து, யானைகளை உடன் வைத்திருந்தமை தொடர்பிலான விவகாரத்தில்வன ஜீவிகள் திணைக்களத்தின் பொறுப்பின் கீழ் பின்னவலை மற்றும் வேறு யானை பராமரிப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 யானைகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க கொழும்பு மேலதிக நீதிவான் மற்றும் மாத்தளை நீதிவான் அகியோர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய , சி.ஐ.டி.யினர் முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நீதிவான்கள் வழங்கிய உத்தர்வுகள் விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பிலான கட்டளை சட்டத்தின் விதிவிதானங்களை மீறுவதாக குறிப்பிட்டார்.
அவ்வாறு விடுவிக்க உத்தரவிடப்பட்ட யாணைகளில், 'சுஜீவா' எனும் யானையும் உள்ளதாகவும், அந்த யானையையும் அதன் குட்டியையும் அதன் உரிமையாளர் என கூறும் தரப்புக்கு விடுவித்தால் , அந் நிலைமை மிக மோசமானதாக அமையும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி சுஜீவா யானையையும் அதன் குட்டியையும் உரிமையாளருக்கு விடுவிக்கக் கோரி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை முன் வைக்கப்படவுள்ள நிலையில், அதனை தடுத்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.
முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், தற்போதும் வன ஜீவிகள் திணைக்கள பொறுப்பிலுள்ள 'சுஜீவா' எனும் யானையையும் அதன் குட்டியினையும் எந்த தரப்புக்கும் விடுவிப்பதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த மனுக்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
No comments:
Post a Comment