பலவீனப்படுத்தவும் முன்னேற்றத்தை தடுக்கவும் தேசிய, சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன - சாகர காரியவசம் - News View

Breaking

Monday, September 6, 2021

பலவீனப்படுத்தவும் முன்னேற்றத்தை தடுக்கவும் தேசிய, சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும், நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கவும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச மட்டத்தில் உள்ள ஒரு சில ஊடகங்களில் இலங்கை தொடர்பில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் சர்வதேச மட்டத்திலான ஒரு சில ஊடகங்கள் இலங்கை தொடர்பில் பொய்யான செய்திகளை மாத்திரம் பதிவேற்றம் செய்துள்ளன. நெருக்கடியான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அதனூடாக இலாபமடையும் நோக்கத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது.

2019 ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றது. கொவிட் தாக்கத்தினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டது. சிறந்த திட்டமிடல்கள் ஊடாக அனைத்து சவால்களையும் அரசாங்கம் சமாளித்து வருகிறது.

அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும், நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கவும் ஒரு தரப்பினர் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். அரச அதிகாரிகளின் தவறான செயற்பாடுகளை அரசாங்கத்தின் செயற்பாடு என்று கருத முடியாது. அரச அதிகாரிகள் தவறான முறையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் பொய்யான செய்திகள் குறித்து நாட்டு மக்கள் கவனம் செலுத்துவது பயனற்றது என்றார்.

No comments:

Post a Comment